புதுடெல்லி: உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி டெல்லியில் நேற்று அறிவித்தார். செய்தியாளர்களிடம் நேற்றுப் பேசிய திரு நஜீம், 5 மாநிலங்களில் மொத்தம் 690 சட்டமன்றத் தொகு திகள் உள்ளன என்றார். இதில் உத்தரப் பிரதேசத்தில் 403 தொகுதிகளும் பஞ்சாபில் 117 தொகுதிகளும் உத்தரகாண்டில் 70 தொகுதிகளும் கோவாவில் 40 தொகுதிகளும் மணிப்பூரில் 60 தொகுதிகளும் உள்ளன.
கோவா, பஞ்சாப் மாநிலங் களுக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 4ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று நஜீம் ஜைதி தெரிவித்தார். உத்தரகாண்ட் மாநிலத்துக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 15ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று அவர் அறிவித்தார். மணிப்பூரில் மார்ச் 4ம் தேதி முதற்கட்ட தேர்தல் நடைபெறும் என்றும் மார்ச் 8ல் 2ஆம் கட்ட தேர்தல் நடைபெறும் என்றும் நஜீம் ஜைதி கூறினார். மிக அதிக அளவில் சட்ட மன்றத் தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேசத்தில் பிப்ரவரி 11,15,19, 23, 27, மார்ச் 4, 8 ஆகிய தேதிகளில் 7 கட்டங்களாக தேர் தல் நடைபெறுகிறது.