பன்னீர் செல்வம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ள படத்தின் நாயகியாக நடிக்க லட்சுமி மேனனிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்கள். 'கவண்', 'அநீதி கதைகள்', 'விக்ரம் வேதா', '96' ஆகிய படங்களில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி. அவரது நடிப்பில், ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'புரியாத புதிர்' வரும் 13ஆம் தேதி வெளியீடு காண உள்ளது. மேலும் ஒரு புதிய படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார் விஜய் சேதுபதி. ஏ.எம்.ரத்னம் தயாரிக்கவுள்ள இப்படத்தை இயக்குபவர் பன்னீர்செல்வம். படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்க உள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிப்பதற்கு லட்சுமி மேனனிடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
படப்பிடிப்புக்கான தேதிகள் முடிவானவுடன் லட்சுமி மேனன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. வில்லன் கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹா நடிக்கிறார். படத்தின் இசையமைப்பாளர் இமான். மொத்த படப்பிடிப்பையும் ஒரே கட்டமாக முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம். இதற்கிடையே ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்திருக்கும் 'ப்ரூஸ் லீ' வெளியீடு காண தயாராக உள்ளது. இதையடுத்து 'ஈட்டி' பட இயக்குநர் ரவி அரசு இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடிப்பதற்கு கதாநாயகியைத் தேடும் படலம் நடந்தது. பலரையும் அணுகி, இறுதியில் தேர்வாகி உள்ளார் மடோனா செபாஸ்டியன்.