தமிழர்களின் முக்கிய விழாவான பொங்கல் திருநாளைக் கட்டாய விடுமுறைப் பட்டியலில் இருந்து நீக்கி, விருப்ப விடுமுறைப் பட்டி யலில் சேர்த்ததால் தமிழகமே கொந்தளித்தது. இதையடுத்து, பொங்கல் திரு நாளைக் கட்டாய விடுமுறைப் பட்டியலில் சேர்ப்பதாக நேற்று மாலை மத்திய அரசு திடீர் அறி விப்பை வெளியிட்டது. தமிழர்களின் வீர விளையாட் டான ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப் பட்ட தடையை நீக்கக் கோரி மாநிலம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துவரும் நிலையில், விருப்ப விடுமுறைப் பட்டியலில் பொங்கல் திருநாளைச் சேர்ப்பதாக மத்திய அரசு அறிவித்தது எரிகிற கொள்ளி யில் எண்ணெய் ஊற்றியதுபோல அமைந்தது.
பொங்கல் திருநாளைக் கொண் டாடுவோர் மட்டும் அன்றைக்கு விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. இதற்குத் தமிழகத்தில் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. திமுக, மதிமுக, தேமுதிக, நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வெகுண்டெழுந்து, மத்திய அரசுக் கெதிராக அறிக்கை விடுத்தன. பொங்கல் திருநாளை தேசிய விடுமுறைப் பட்டியலில் சேர்த்து, தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்களுக் கும் கட்டாய விடுமுறை அளிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதினார்.
பொங்கல் திருநாள் நெருங்கும் நிலையில் ஜல்லிக்கட்டு ஆதரவுக்குரல் தமிழகத்தில் ஓங்கி ஒலித்து வருகிறது. அவ்வகையில், மதுரையில் நேற்று முன்தினம் ஏராளமான இளையர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். நேற்றும் சில கல்லூரிகளில் மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்தனர். படம்: தி இந்து