ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உடனடியாகத் தீர்ப்பு வழங்க வாய்ப்பில்லை என்று உச்ச நீதிமன்றம் நேற்று மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கிறது. இதையடுத்து, தொடர்ந்து மூன்றாம் ஆண்டாகத் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளியான பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும் என்று மத்திய அரசும் கூறிவிட்டதால் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படவும் வாய்ப்பில்லா மல் போய்விட்டது. ஆயினும், "உச்ச நீதிமன்றத் தடை குறித்து எங்களுக்குக் கவலையில்லை. இவ்வாண்டு ஜல்லிக்கட்டு நடைபெறுவது உறுதி," என்று ஆங்காங்கே உறுதியான குரல்கள் ஒலித்து வருவதால் தமிழகத் தில், குறிப்பாக ஜல்லிக்கட்டுக்குப் பெயர் போன அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய இடங்களில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலிசார் அங்கு குவிக்கப்பட்டு வருகின் றனர். அலங்காநல்லூரில் வாடிவாசல் போலிசார் வசம் சென்றுள்ளது. அதே நேரத்தில், தமிழகத்தில் ஜல்லிக் கட்டு ஆதரவுப் போராட்டம் நேற்றும் தொடர்ந்தது. மாவட்டத் தலைநகரங்களில் திமுக வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண் டார். "எத்தனையோ விஷயங்களுக்காக அவசரச் சட்டம் இயற்றியிருக்கும் மத்திய அரசு ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மட்டும் அதைச் செய்யாதது ஏன்?" என்று கேட்டார்.