கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்த குடி என்று தொன்றுதொட்டு குறிப்பிடப்படும் தமிழ் இன மக்களுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை மிக முக்கிய மான நாள். உழவுத் தொழிலுக்கு உதவும் மாடுகளுக்கு நன்றி கூறும் மாட்டுப் பொங்கல் பண்டிகையை அவர்கள் இன்று கொண்டாடுகிறார்கள்.
மாட்டுப் பொங்கல் பண்டிகையை ஜல்லிக்கட்டு என்ற ஒரு வீரவிளையாட்டுடன் கொண்டாடுவது தமிழர்களின் வழமை. உலகம் முழுவதும் தமிழர்கள் வாழ்ந்தாலும் தமிழ்நாட்டில்தான் இந்தப் பாரம்பரியம் தொன்றுதொட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
ஆனால் இன்று ஜல்லிக்கட்டை நடத்த தங்களுக்கு உள்ள உரிமை மறுக்கப்பட்டுவிட்ட ஒரு நிலையை தமிழக மக்கள் எதிர்நோக்கி இருக்கிறார்கள். தமிழர்களைப் பொறுத்தவரையில் வீரத்துக்குத் தனிப்பட்ட சிறப்பு இடம் உண்டு. வீரத்துக்கு என்றே புறநானூறு, வீரத்துக்கு என்றே பற்பல வீர விளையாட்டுகள் என தங்களை அடையாளம் காட்டும் கலாசாரத்துக்குச் சொந்தக்காரர்கள் தமிழர்கள் என்பதை கிறிஸ்துவுக்கு முந்தைய சங்க கால வரலாறு முதலே அறிய முடிகிறது.
இவற்றில் சல்லிக்கட்டு என்றும் ஏறுதழுவல் என்றும் மஞ்சுவிரட்டு என்றும் குறிப்பிடப்படும் காளையை அடக்கும் ஒரு வீர விளையாட்டுக்குத் தனி இடம் உண்டு. தமிழர்கள் நிலத்தை ஐந்து பிரிவுகளாக பிரித்து இருந் தார்கள். அவற்றில் ஒன்று முல்லை. அந்த நில மக்களுக்குத்தான் இந்த வீரவிளையாட்டு சொந்தமானது.
இதற்காகவே கோவில் காளைகள் என்ற காளைகளை கட்டுப்பாடு இன்றி திமிர்பிடித்துத் திரியவிட்டு ஊர்களில் வளர்ப்பது உண்டு. பொங்கல் பண்டிகையின் ஓர் அங்க மான மாட்டுப் பொங்கல் நாளன்று கோவில் காளையின் கொம்பைச் சீவி அதில் தங்கம், வெள்ளியால் ஆன சல்லியைக் கட்டி காளையை அவிழ்த்துவிட்டு 'முடிந்தால் காளையை அடக்கி, சல்லியை எடுத்துக்கொள்ளுங்கள்' என்று பொதுமக்களுக்குச் சவால்விட்டு அவர்களின் வீரத்தை மதிப்பிடும் ஒரு வழமைதான் சல்லிக்கட்டு.
இந்தப் பெயர் மருவி இப்போது ஜல்லிக்கட்டு என்று குறிப்பிடப்படுகிறது. தமிழகத்தின் தென்பகுதியில் தொன்றுதொட்டு நடந்து வரும் இந்த வீர விளையாட்டு உலக அளவில் பிரபலமானதாக, தமிழர்களின் பெயர் சொல்லும் அடையாளமாகத் திகழ்ந்து வருகிறது. இருந்தாலும் இந்த விளையாட்டு, காளைகளைத் துன் புறுத்தக்கூடிய, இளையர்களுக்கு காயத்தை, மரணத்தை விளைவிக்கக்கூடிய, சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளைக் கிளப்பிவிடக்கூடிய அளவுக்குத் தரமும் பண்பாடும் படிப் படியாக நீர்த்துப்போய் கேலிக்கூத்தாகிவிட்டது என்றும் காளைகளுக்குப் போதை ஊசியைப் போட்டு, மிளகாய்ப் பொடியைத் தூவி அதை உசுப்பேற்றிவிடுகிறார்கள் என்றும் அவை போதையில் உயிருடற்சேதத்தை ஏற்படுத்து வதாகவும் அத்தகைய காளைகள் மடிந்துவிடுவதாகவும் புகார்கள் எழுந்தன.
இத்தகைய விலங்குவதை ஜல்லிக்கட்டைத் தடுக்க வேண்டும் என்று முடிவு செய்து இந்தியாவின் விலங்கு வதை தடுப்புச் சங்கமும் விலங்கு ஆர்வலர்களும் 2004ஆம் ஆண்டில் போராட்டம் தொடங்கினார்கள். இவற்றின் விளைவாக 2014ல் இந்த விளையாட்டு தடை செய்யப்பட்டது. மக்களின் விருப்பத்துக்குச் செவிசாய்க்கும் வகையில் இந்திய அரசாங்கம் ஜல்லிக்கட்டுக்கு விதி விலக்கு அளிக்கும் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது. ஆனால் உச்ச நீதிமன்றம் தடையை அகற்றவில்லை. நீதியை மதிக்கவேண்டும் என்ற நிலை ஒருபுறம் இருந் தாலும் அதை ஒதுக்கிவிட்டு, தங்கள் உரிமையை, பாரம் பரியத்தைக் காக்கவேண்டும் எனத் தமிழர்கள் இன்று தடையை மீறத் தயாராகிவிட்டதாகத் தெரிகிறது. எல்லா அரசியல் கட்சிகளும் போராடும் மக்கள் பக்கம் இருக்கின்றன. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவளித்தாலும் சட்டத்தை, நீதியைக் காக்கவேண்டுமே என்ற கவலையில் இருக்கிறது தமிழக அரசு.
ஒரு நாட்டில் ஓர் இனத்தின் உரிமைக்கு, பாரம்பரியத் துக்கு அந்த நாட்டின் நீதிமன்றம் உத்தரவாதம் அளிக்கத் தான் வேண்டும். அதேவேளையில் தங்கள் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் ஒரு கொடி, நீதிமன்றம் என்ற கொடிமரத்தின் ஆதரவுடன்தான் பறக்கவேண்டும் என்பதை அந்த இனத்தவர் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். நீதி மன்றமும் நீதிமன்றத் தடையை மீறி இன்று ஜல்லிக்கட்டு நடத்தும் மக்களும் இதை உணர்ந்து செயல்படுவார்கள் என்று நம்புவோம்.