காருக்குள் தூங்கிய ஓட்டுநர்; எழுந்ததும் எதிர் திசையில் விரைந்தபோது போலிஸ் மடக்கிப் பிடித்து கைது செய்தது. போக்குவரத்துக்கு எதிராக வாகனம் ஓட்டும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருவதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினமும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. உட்லண்ட்ஸ் அவென்யூ 1, உட்லண்ட்ஸ் அவென்யூ 2 சந்திப்பில் அச்சம்பவம் நிகழ்ந்ததாக சனிக்கிழமை காலை 7.06 மணிக்கு தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக போலிஸ் கூறியது. பிஎம்டபிள்யூ கார் ஒன்று அங்கு வெகுநேரம் நின்றிருந்ததாகவும் போக்குவரத்து விளக்குகள் மாறி மாறி எரிந்தபோதிலும் பின்னால் இருந்த வாகனங்கள் ஒலி எழுப்பியபோதிலும் அந்த கார் நகரவில்லை என்றும் சம்பவத்தை நேரில் பார்த்த ஓங் என் பவர் 'வான்பாவ்' செய்தித்தாளிடம் தெரிவித்தார். அந்த காரினுள் இருந்த ஓட்டுநரின் கண்கள் மூடியதுபோலக் காணப்பட்டதால் தாம் அந்தக் காரின் சன்னலைத் தட்டி அவரை எழுப்ப முயன்றதாக அவர் கூறினார். ஆனால், அந்தச் சத்தத்திற்கு அவர் எழாததால் தாம் போலிசை அழைத்ததாக திரு ஓங் தெரிவித்தார்.
எதிர்திசையில் சென்ற காரை போலிஸ் மடக்கியது. படம்: ஃபேஸ்புக்