பெங்களூரு: அறிமுகமான முதல் அனைத்துலக டி20 தொடரிலேயே இளம் சுழற்பந்து வீச்சாளர் யுஸ் வேந்திர சகல் விக்கெட் வேட்டை நிகழ்த்த, இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரை இந்திய அணி 2-1 எனக் கைப்பற்றியது. சகல் ஆறு விக்கெட்டுகளையும் பும்ரா மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்த, இந்தியா மூன்றாவது டி20 போட்டியில் 75 ஓட்ட வித்தியாசத் தில் வென்றது. ரெய்னா (63), டோனி (56), யுவராஜ் (27) ஆகியோர் கை கொடுக்க, முதலில் பந்தடித்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 202 ஓட்டங்களை எடுத்தது.
அடுத்து பந்தடித்த இங்கிலாந்து அணி 16.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ஓட்டங்களை மட்டுமே எடுத்துத் தோற்றது. ஒரு கட்டத்தில் 119/2 என்று வலுவான நிலையிலிருந்த அந்த அணி, அடுத்து 19 பந்து களில் எட்டு ஓட்டங்களை மட்டும் சேர்த்து மீதமிருந்த எட்டு விக் கெட்டுகளையும் பறிகொடுத்தது. நான்கு ஓவர்களை வீசி 25 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து ஆறு விக்கெட்டுகளை வீழ்த்திய சகல் ஆட்ட நாயகன், தொடர் நாயகன் விருதுகளை வென்றார்.
ஆறு விக்கெட்டுகளை அள்ளிய யுஸ்வேந்திர சகலை (நடுவில்) தங்களது கைகளில் அள்ளிக் கொண்டாடும் சக இந்திய வீரர்கள் சுரேஷ் ரெய்னா (இடது), யுவராஜ் சிங். படம்: ஏஎஃப்பி