மதுரை: மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளை களை கால்நடைப் பராமரிப்புத்துறையினர் நேரடியாகப் பரிசோதனை செய்து உடல் தகுதிச் சான்று மற்றும் வரிசை எண் வழங்கும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. ஜல்லிக்கட்டு விளையாட்டைத் தடையின்றி நடத்தத் தமிழக அரசு அவசரச் சட்டம் இயற்றி அதற்கு அதிபரும் ஒப்புதல் அளித்துள்ளார். இதனால், மதுரை மாவட்டத்தில் தற்போது ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளன.
ஜல்லிக்கட்டுக் காளைகளை முன்பதிவு செய்வதற்கு ஜல்லிக்கட்டுக் காளையின் 2 புகைப்படம் (மேக்ஸி/போஸ்ட் கார்டு சைஸ்), காளை உரிமையாளர்களின் 2 நகல் ஆதார் என்னும் அடையாள அட்டை, காளை உரிமையாளரின் 2 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் எடுத்து வர அறிவுறுத்தப்- பட்டுள்ளது. இதில் ஒன்று இல்லாவிட்டாலும் காளை உடற் தகுதித் தேர்வில் தேறாவிட்டாலும் ஜல்லிக்கட்டில் பங்கேற்க சம்பந்தப்பட்ட காளைகளுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரோக்கியமற்ற காளைகள் மற்றும் 7 வயதைத் தாண்டிய காளைகளை ஜல்லிக்கட்டில் ஈடுபடுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.