ஜெயம் ரவியும் அரவிந்த்சாமியும் தற்பொழுது இணைந்து நடித்து வெளிவந்திருக்கும் படம் 'போகன்'. இவர்கள் இருவரும் இதற்கு முன்பு 'தனி ஒருவன்' என்ற படத்தில் நடித்திருந்தினர். அந்தப் படத்தில் அரவிந்த்சாமி ஜெயம் ரவியை விட அமர்க்களமாக நடித்திருந்தார். அதைச் சரிகட்டும் விதத்தில் தற்பொழுது வெளிவந்துள்ள 'போகன்' படத்தில் ஜெயம் ரவி, அரவிந்த்சாமியை விட நடிப்பில் ஒரு படி அதிகமாக நடித்து தூள் கிளப்பி இருக்கிறார். ஜெயம் ரவி கடந்த சில ஆண்டுகளாகவே தன்னுடைய படங்களைக் கவனமாகத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். 'தனி ஒருவன்', 'பூலோகம்', 'மிருதன்' என வித்தியாசமான கதைக்களத்தில் ஒரு பக்கமும் 'ரோமியோ ஜுலியட்' மாதிரி வணிக ரீதியான கதைக்களத்தில் மற்றொரு பக்கமும் என இரட்டைக் குதிரையில் வெற்றிப் பவனி வருகின்றார்.
தற்பொழுது மீண்டும் 'ரோமியோ ஜுலியட்' இயக்குநருடன் ஜெயம் ரவி மீண்டும் கைகோத்திருக்கும் படம் 'போகன்'. கதையில் அரவிந்த்சாமி மன்னர் பரம்பரையில் பிறந்து கடனில் மூழ்கி தெருவுக்கு வருகிறார். அந்த நேரத்தில் மக்களை ஏமாற்றிக் கொள்ளையடித்து திருடி பணத்தைச் சேர்த்து சொகுசு வாழ்க்கை வாழ்கிறார். அவர் ஒரு அகழ்வாராய்ச்சி நடக்கும் இடத்தில் இருந்து ஓலைச்சுவடி ஒன்றை எடுக்க அதை வைத்து கூடுவிட்டுக் கூடுபாயும் வித்தையைக் கற்று அதன்மூலம் பல வங்கிகளில் தன் சக்தியைப் பயன்படுத்திக் கொள்ளையடிக்கின்றார். அப்படி ஒரு வங்கியில் அதிகாரி நரேன் மூலம் கொள்ளையடிக்க, நரேனின் மகனாக வரும் காவலர் ஜெயம் ரவி, தன் அப்பாவைக் காப்பாற்ற இந்த வழக்கில் தீவிரம் காட்டுகின்றார்.