மலை விழுங்கிகளும் அரசியல் கைப்பிள்ளையும்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக எத்தனையோ பேர் பொறுப்பு வகித்து இருக்கிறார்கள். அவர்களில் பலரும் பலதடவை முதல்வராக இருந்திருக்கிறார்கள். முதல் வராக ஆகி ஆட்சிபுரிந்த எல்லாருமே மக்களின் ஆதர வுடன் வாக்கு வளத்துடன் அந்தப் பதவியைப் பிடிக்க பட்டபாடு கொஞ்சநஞ்சமல்ல. ஆனால் அரசியலில் ஒரு முயற்சிகூட செய்யாமல் அதிர்ஷ்டம் காரணமாக யானை மாலைபோட்டு ஆட்சிக்கு வந்தவரைப்போல் முதல்வர் பதவியில் அமர்ந்தவர் - ஒருதடவை அல்ல இரண்டு தடவை அமர்ந்தவர் ஒருவர் உண்டு என்றால் அவர் தமிழகத்தின் இப்போதைய முதல்வர் ஓ பன்னீர்செல்வமாகத்தான் இருக்க முடியும். அதிமுகவின் அசைக்க முடியாத இரும்புத் தலைவியாக ஆட்சிபுரிந்து வந்த ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருந்துவந்த ஒரே காரணத்துக்காக அவருக்கு இந்தப் பெரும் பதவி கிடைத்து இருக்கிறது.

முதல்வர் பன்னீர், ஜெயலலிதா இருந்தபோதும் முதல் வராக இருந்து இருக்கிறார். அவர் இல்லாத இப்போதும் முதல்வராக ஆட்சி புரிகிறார். என்றாலும் இரண்டு காலத்துக்கும் இடையில் தலைகீழ்வேறுபாடு ஏற்பட்டுவிட்டது. பன்னீர் இப்போது அரசியல் அனாதை யாக, கைப்பிள்ளையாகக் காட்சி தருகிறார். ஜெயலலிதாவுக்குப் பிறகு அதிமுகவின் தலைமை பொறுப்பை ஏற்றுக்கொண்ட சசிகலா நடராஜன் தானே முதல்வர் பதவிக்கு வர விரும்புவதாக நிலவரங்கள் காட்டுகின்றன. சட்டமன்றத்திலும் வெளியிலும் அதிமுக வினர் பன்னீரை மதிக்காமல் சின்னம்மா என்று சசிகலா வின் துதிபாடுவதை வைத்துப் பார்க்கையில் பன்னீருக்கு அரசியலில் ஒரு துளி கண்ணீர்விடக்கூட ஆளில்லை என்பதுதான் உண்மை நிலவரமாக இருக்கக்கூடும்.

இருந்தாலும் அன்று முதல் அவருக்குத் துணையாக இருந்துவரும் அதிர்ஷ்ட சூழ்நிலை இப்போதைக்கு அவரைக் கைவிடாது என்றே தெரிகிறது. மத்தியில் ஆளும் பாஜகவும் தமிழகத்தில் ஏறக்குறைய 100 சட்ட மன்ற உறுப்பினர்களைத் தன்வசம் வைத்து இருக்கும் திமுக கூட்டணியும் போட்டிபோட்டுக்கொண்டு முதல்வர் பன்னீர் செல்வத்துக்கு உதவிக்கரம் நீட்டுகின்றன. நாடாளுமன்றத்தில் 50 உறுப்பினர்கள் பலத்தைக் கொண்டுள்ள அதிமுகவின் ஆதரவு தனக்குத் தேவை என்பதை உணர்ந்து அந்த ஆட்சியையும் விசுவாசத்துக் குப் பெயர்போன அதன் முதல்வர் பன்னீரையும் ஆதரிக்க வேண்டும் என்பது பாஜகவின் உத்தியாக உள்ளது.

அதேவேளையில், பன்னீரை அரசியல் ஆபத்து சூழ்ந் தால் அவரின் எதிரிகளுக்குத் தண்ணீர்காட்டி பன்னீரைக் காக்க தான் தயார் என்பதை திமுக சூசகமாக வெளிப் படுத்தி இருக்கிறது. அரசியலில் மலை விழுங்கிகளாக இருக்கின்ற பெருந்தலைகளுக்கு இடையில் அகப்பட்டுக் கொண்ட ஓர் அப்பாவியாகவே பன்னீர் இருக்கிறார் என்றாலும் தனக்கு சாதகமாக இருக்கின்ற நிகழ்கால அதிர்ஷ்ட சூழலை லாவகமாக பயன்படுத்திக்கொண்டால் தனக்கு ஓர் அரசியல் எதிர்காலத்தை முதல்வர் பன்னீர் உறுதிப்படுத்திக்கொள்ள வழி ஏற்படும்.

அண்மைய ஜல்லிக்கட்டு அமைதிப் போராட்டம் கடைசி யில் வன்செயல் போராட்டமாக மாறியது எப்படி என்பதை ஆராய்வது உள்ளிட்ட பல நடவடிக்கைகளை துணிச்சலாக எடுத்து மக்களுக்கு தன் மீது நம்பிக்கை ஏற்படும் அளவுக்கு பன்னீர்செல்வம் நடந்துகொண்டால் கொஞ்சம் கொஞ்சமாக தலையெடுத்து அவர் மக்களின் செல்வமாக, செல்லமாக ஆக வழி உண்டு.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!