புதுடெல்லி: உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து யோகி ஆதித்யநாத் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். யோகி ஆதித்யநாத்தின் நியமனத்தை மதரீதியாக விமர்சனம் செய்து அமெரிக்க செய்தித்தாளான நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டு இருந்தது. இந்தியாவில் சிறுபான்மை யினரான இஸ்லாமியர்களுக்கு எதிரான இந்து மதவாதியான யோகி ஆதித்யநாத் உத்தரப் பிரதேச முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் அது குறிப்பிட்டது.
மதச்சார்பற்ற இந்தியாவை இந்துக்களின் நாடாக மாற்றும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்தியாவின் முக்கியமான மாநிலத்தில் இந்துத்துவவாதியை முதல்வராக நியமித்துள்ள தாகவும் நியூயார்க் டைம்ஸ் செய்தி தெரிவித்தது. இதற்கிடையே, யோகி ஆதித்யநாத்தின் நியமனத் தையும் பிரதமர் மோடியையும் மத ரீதியாக விமர்சித்து நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டதற்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. இது தொடர்பாக நியூயார்க் டைம்ஸ் செய்தித் தாளிடம் இந்திய அரசு சார்பில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.