பல மாதர்களை ஆபாசமாக படம் பிடித்து 30க்கும் மேற்பட்ட காணொளிகளையும் படங்களையும் எடுத்த 30 வயது ஆடவர் ஒருவருக்கு நேற்று 12 வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பெஞ்சமின் டான் ஜுன் குவாங் என்ற அந்த ஆடவர் தெம்பனிஸ் ஸ்திரீட் 22 அருகே வசிக்கிறார். அதன் அருகே அனைத்துத் தீவு விரைவுச்சாலை குறுக்கே கட்டப்பட்டிருக்கும் மேம்பாலத்தில் ஏறிச்செல்லும் மாதர்களை டான் கீழே இருந்து ஆபாசமாக படம் எடுப்பார்.
இப்படி 2011 நவம்பர் முதல் 2014 ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை பல பெண்களையும் இவர் மானபங்கம் செய்து 36 குற்றச்செயல்களில் ஈடுபட்டார். தன் மீது சுமத்தப்பட்ட 36 குற்றச்சாட்டுகளில் ஆறு குற்றச்சாட்டுகளின் பேரில் குற்றத்தை டான் ஒப்புக்கொண்டார். எஞ்சிய குற்றச்சாட்டுகள் தண்டனை விதிக்கப்பட்டபோது கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன. டான் கடைசியாக 2014 ஆகஸ்ட் 7ஆம் தேதி கைதானார். இதற்கிடையே, வேறொரு வழக்கு விசாரணையில் இஸ்லாம் முகம்மது அரிஃபுல், 24 என்ற பங்ளாதேஷ் நாட்டைச் சேர்ந்த தொழில்நுட்பருக்கு 12 வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தன்னுடைய அலுவலக கழிவறைக்கு வரும் பெண்களைத் தன்னுடைய கைத்தொலைபேசி மூலம் அவர் காணொளிப் படம் எடுத்ததாகக் கூறப்பட்டது.