மைல்கல்லில் தமிழ்தான் பாஜகவுக்கு வழிகாட்டும்

இன்றைய உலகில் ஏறக்குறைய 6,500 மொழிகள் பேசப் படுகின்றன. அவற்றில் சுமார் 2,000 மொழிகளைப் பேசுவோரின் எண்ணிக்கை 1,000க்கும் குறைவு. உலகில் பல மொழிகள் புழங்கும் நாடுகள் பல இருக்கின் றன. இருந்தாலும் மொழியைப் பொறுத்தவரையில் இந்தியாவைப்போல வேறு ஏதாவது ஒரு நாடு இந்த உலகில் இருக்கிறதா என்பது சந்தேகம்தான்.

பல கலாசார, சமய, மொழிகளின் நாற்றங்கால்களைக் கொண்ட இந்தியா என்ற துணைக் கண்டத்தில், 1961 ஆம் ஆண்டு நிலவரப்படி 1,652 அங்கீகரிக்கப்பட்ட தாய்மொழிகள் புழக்கத்தில் இருந்தன. என்றாலும் அவற்றில் சுமார் 1,100 மொழிகள்தான் நன்கு பரிண மித்த மொழிகளாக வகைப்படுத்தப்பட்டன.

கடந்த அரைநூற்றாண்டில் அந்த மொழிகளில் சுமார் 300 மொழிகள் காணாமல்போய்விட்டன. இப்போது இந்தியாவில் சுமார் 800 மொழிகள் பேசப்படுகின்றன. அவற்றில் 22 மொழிகளே ஆங்கில அரசமைப்புச் சட்ட அட்டவணையில் இடம்பெற்று இருக்கும் அதிகாரபூர்வ மொழிகளாக இருக்கின்றன.

அந்த 22ல் செம்மொழியான தமிழ்மொழியும் அதிக மக்கள் பேசும் இந்தி மொழியும்தான் அரசியல் போராட் டத்தில் அதிக மேடை ஏறிய மொழிகளாக இருந்துவந் துள்ளன என்பது வரலாறு மூலம் தெரிகிறது. இந்தி மொழி அதிகமாக புழங்கப்படுவதால் அந்த மொழிதான் இந்தியாவின் பொது ஆட்சிமொழியாக இருக்கவேண் டும் என்று 1938ல் இந்தி கட்டாய பாடமாக்கப்பட்டது.

நாடு சுதந்திரம் அடைந்ததும் அரியணை ஏறிய காங் கிரஸ் கட்சி, பெரும்பாலான மக்களின் பேராதரவைத் தொடர்ந்து பெற வேண்டும் என்பதற்காக, இந்திய மக்கள் தாய்மொழியோடு இந்தியையும் ஆங்கிலத்தையும் கற்க வேண்டும் என்று 1965ல் இந்தி ஆட்சி மொழிச் சட்டத்தை அமலாக்கியது. ஆனால் அந்த இந்தித் திணிப்பு மும்மொழிச் சட்டத்தை எதிர்த்து தமிழகத்தில் மூண்ட உணர்வு ரீதியிலான மாபெரும் உயிர்பலி போராட்டம் காரணமாக அந்தச் சட்டம் தோல்விகண்ட தோடு, தமிழக அரசியலில் காங்கிரஸ் கட்சி இன்று வரை தலையெடுக்க முடியாமலேயே போய்விட்டது.

அது முதல் இந்தியாவில் தமிழகம் உட்பட பல மாநிலங்களில் ஆங்கிலம், தாய்மொழி என்ற இருமொழி திட்டமே அமலில் இருந்துவருகிறது. என்றாலும் காங்கிரஸ் கட்சியைப் போலவே இப்போதைய பாஜகவும் இந்த இரு மொழி திட்டத்திற்குப் பதில் இந்தியை முன்னிலைப்படுத்தும் ஒரு திட்டத்தை அமல்படுத்த முயற்சிகளை முடுக்கிவிட்டுவருவதாக தமிழக அரசியல் வாதிகள் இப்போது நம்புகிறார்கள்.

பாஜக ஆட்சி அமைந்ததும் அரசியல்வாதிகள் இந்தி யில்தான் பேசவேண்டும் என்றும் சமூக வலைத்தளங் களில் அவர்கள் இந்தியைப் புழங்க வேண்டும் என்றும் 2014ல் ஓர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பள்ளிகளில் சமஸ்கிருதம் கட்டாயம் என்று பாஜக அரசு உத்தர விட்டிருப்பதாகவும் தகவல் வெளியானது.

தமிழகத்தில் இதற்கு உடனடியாகக் கிளம்பிய பெரும் எதிர்ப்பில் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா முக்கிய பங்கு எடுத்துக்கொண்டு இந்தியா வின் மொழிப் போராட்டத்தை, மொழிகள் வரலாற்றை, மொழிகள் தொடர்பான அரசமைப்புச் சட்டங்களை, தமிழரின் மொழி உணர்வை எல்லாம் கடிதம் மூலம் பிரதமர் மோடிக்கு சுட்டிக்காட்டினார். அந்தப் பிரச்சினை சற்று ஓய்ந்திருந்த நேரத்தில் இப்போது தமிழகத்தின் பல பகுதிகளிலும் சாலை மைல்கற்களில் இந்தி இடம் பெறுவதாக புதிய பிரச்சினை கிளம்பி இருக்கிறது. எல்லா திராவிட கட்சிகளும் இந்த மைல்கல் இந்தி வரவைக் கடுமையாக எதிர்க்கத் தொடங்கிவிட்டன.

திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவர்களின் கதை எல்லாம் முடிந்துவிட்ட நிலையில், அந்த இயக்கம் மறுபடியும் வீறுகொண்டு எழுவதற்கு காரணங்களைத் தேடி வரும் நிலையில், அவற்றுக்குத் தோதாக மொழி என்ற பேராயுதத்தை அதனிடம் பாஜக ஒப்படைக்கிறது என்பதையே அதன் இந்திமொழி நடவடிக்கைகள் காட்டுவதாகத் தெரிகிறது. இந்தியாவில் 60%ஐ அரசியல் ரீதியில் தன்வசமாக்கிவிட்ட பாஜக, தமிழ் நாட்டையும் பிடிக்க வியூகம் வகுத்து வருகிறது.

அந்த வியூகம் வெற்றிபெற்று, தமிழகத்தில் தலை நிமிர்ந்து சிவப்புக் கம்பளத்தில் பாஜக நடைபோடவேண்டு மானால் அதற்கான அரசியல் வழியை இந்தி இல்லாத தமிழ் மைல்கற்கள்தான் பாஜகவுக்கு காட்டும் என்பதை, குறிப்பாக பிரதமர் மோடி நன்கு உணரவேண்டும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!