லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்து வரலாற்றில் ஆர்சனல் குழு பட்டியலின் முதல் ஐந்து இடங்களுக்குள் இல்லாமல் இருப்பது 2006ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவே முதன்முறை. இந்தப் பருவத்தில் தொடர்ந்து 20 ஆட்டங்களாகத் தோல்வியையே சந்திக்காமல் இருந்த அக்குழு, கடைசியாக விளையாடிய ஐந்து இபிஎல் ஆட்டங்களில் ஒன்றில் கூட வெல்லவில்லை என்பது மிகப் பெரிய முரண்பாடு.
அதனால், கடந்த 21 ஆண்டுகளாக ஆர்சனல் நிர்வாகியாக இருந்துவரும் ஆர்சன் வெங்கர் மீது அக்குழுவின் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர். ரசிகர்களில் கிட்டத்தட்ட நால்வரில் ஒருவர் இந்தப் பருவத்துடன் அவர் வெளியேறவேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர். இப்படியொரு இக்கட்டான நிலையில், தனக்குச் சொந்தமான எமிரேட்ஸ் அரங்கில் மான்செஸ்டர் சிட்டி குழுவிற்கு எதிராக இன்று இரவு நடக்கவுள்ள ஆட்டத்தில் ஆர்சனல் வெற்றி பெற்றே தீர வேண்டிய நெருக்கடியில் உள்ளது. அதே நேரத்தில் சொந்த அரங்கில் கடைசியாக நடந்த ஏழு ஆட்டங்களில் ஆறில் வென்றிருப் பது ஆர்சனலுக்குச் சாதகமான அம்சம்.
ஆர்சனலின் முன்னணி தாக்குதல் ஆட்டக்காரர் அலெக்சிஸ் சான்செஸ் இன்றைய ஆட்டத்தில் விளையாடுவது உறுதி. காயம் காரணமாக கடந்த ஆறு வாரங் களாக விளையாடாமல் இருந்த மத்தியத் திடல் ஆட்டக்காரர் மெசுட் ஓஸில் இன்று களமிறங்கக் கூடும் என்று தெரிகிறது.