கிறிஸ்துவர்களுக்கும் யூதர்களுக்கும் எதிராக கருத்துத் தெரிவித்ததாகக் கூறப்படும் இமாம் ஒருவர் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டிருப்பதை ஆக்ககரமான ஒரு செயலாகக் கருத்தில் கொள்ளவேண்டும் என்று நாடாளுமன்ற நாயகர் ஹலிமா யாக்கோப் தெரிவித்து இருக்கிறார். மார்சிலிங்கில் ஒரு சமூக நிகழ்ச் சியில் கலந்துகொண்ட அவர், அந்த இமாம் பல்வேறு சமயங்களின் மக்களை ஒன்றுதிரட்டி மன்னிப்புக் கேட்டுக்கொண்டிருப்பது பெரும் செயல் என்று குறிப்பிட்டார்.
இமாம் நல்லா முகம்மது அப்துல் ஜமீல், மேக்ஸ்வெல் ரோட்டில் இருக் கும் வேற்றுமையில் ஒற்றுமை கலைக் கூடத்தில் கிறிஸ்துவ, சீக்கிய, பௌத்த, இந்து, தாவோ சமயங் களைச் சேர்ந்தவர்கள், இந்திய முஸ்லிம் கூட்டமைப்பின் உறுப்பி னர்கள் குழுமி இருந்த நிகழ்ச்சியில் வெள்ளிக்கிழமை மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். "இமாம், தான் செய்தது தவறு என்பதை உணர்ந்து கொண்டிருக்கிறார் என்பதுதான் இதில் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன்," என்றார் திருவாட்டி ஹலிமா.