இந்தியப் பயணம் மேற்கொண்ட மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக், தமிழ்நாட்டின் மிகப் பிரபல உணவான இட்லியைத் தன் காலை உணவாகப் பரிசீலிக்கத் தொடங்கி இருப்பதாக புதுடெல்லியில் தெரிவித்தார். பிரதமரின் இந்தியப் பயணத்தின் ஒரு பகுதியாக இரு நாட்டு நிறுவனங்களுக்கிடையில் US$36 பில்லியன் (ரூ.2.45 லட்சம் கோடி) மதிப்புள்ள உடன் பாடுகள் கையெழுத்திடப்பட்டன. அந்த நிகழ்ச்சியில் இந்திய தொழில்துறைத் தலைவர்களிடம் உரையாற்றிய மலேசிய பிரதமர், "மலேசியர்களின் வாழ்க்கையில் இந்திய அம்சங்கள் எந்த அளவுக்கு ஊடுருவி இடம் பிடித்து இருக்கின்றன என்பதை இதன்மூலமே நீங்கள் தெரிந்து கொள்ளலாம்," என்றார்.
மலேசிய மக்கள்தொகையில் இந்திய வம்சாவளியினர் 7%க்கும் அதிகம் என்பதை குறிப்பிட்ட திரு நஜிப், மலேசியாவை உருவாக்குவதில் இந்திய மலேசியர்கள் மிக முக்கியப் பணியாற்றுகிறார்கள் என்றார். மலேசியாவில் வசிக்கும் இந்தியர்களின் பெரும்பாலானோர் தமிழர்கள். பிரதமர் நஜிப் சென்ற வாரம் சென்னையில் பிரபல திரைப்பட நடிகர் ரஜினிகாந்தைச் சந்தித்தார். பாலிவுட் திரைப்படங்களுடன் தமிழ்த் திரைப்படங்களையும் பார்க்கத் தொடங்கி இருப்பதாக வும் நஜிப் குறிப்பிட்டார். நஜிப்பின் இந்திய வருகையை ஒட்டி வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கை ஒன்றில், தென்சீனக் கடல் பிரச்சினைப் பற்றி இரு நாடுகளின் அணுகுமுறைகளும் இடம்பெற்றிருந்தன. அனைத்துலக சட்ட திட்டங்களின்படி கடல் போக்குவரத்து சுதந்திரத்தை மதிப்பதாக இரு நாடுகளும் அந்தக் கூட்டறிக்கையில் குறிப்பிட்டன.