சமுத்திரக்கனி இயக்கி நடித்திருக்கும் புதிய படம் 'தொண்டன்'. விக்ராந்த், சுனைனா, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் சமுத்திரக்கனியோடு முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார்கள். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இப்படத்துக்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அண்மையில் 'தொண்டன்' இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடந்தேறியது. இதில் கலந்து கொண்டவர்களில் இயக்குநர் பாலாவின் பேச்சுதான் அரங்கில் இருந்தவர்களை வெகுவாகக் கவர்ந்தது.
சமுத்திரக்கனியை தனது இளைய சகோதரர் என்று குறிப்பிட்ட அவர், இப்படத்தில் நடித்துள்ள விக்ராந்த் மிக விரைவில் பெரிய நடிகராக உருவெடுப்பார் என வாழ்த்தினார். "சமுத்திரக்கனியை வீராதி வீரன் என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. எல்லாவற்றையும்விட இந்த சினிமாத்துறையில் நல்லவர். அனைவரையும் அனுசரித்துக் கொண்டு போகும் அளவுக்குப் பாசமானவர். "எனக்குப் பிடித்தமானவர்கள் பட்டியலில் சமுத்திரக்கனியின் பெயரே முதலில் உள்ளது. அவரை நான் வாழ்த்திப் பேச வேண்டும் என்கிற அவசியமே இல்லை. அவர் தொண்டர் தான், சினிமாவுக்குத் தொண்டர் தான். எந்ததொரு காலத்திலும் சினிமாவுக்கு தொண்டாற்றிக் கொண்டே இருப்பார்," என்றார் பாலா.