சிக்காகோ: யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தில் இருந்து கடந்த திங்கட்கிழமையன்று பயணி ஒருவர் வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்டது குறித்து அந்த விமானச் சேவையின் தலைமை நிர்வாக அதிகாரி திரு ஒஸ்கார் முனோஸ் மன்னிப்பு கேட்டுள்ளார். அதுமட்டுமல்லாது தமது விமானச் சேவையின் அணுகுமுறைகளை மறுபரிசீலனை செய்யப்போவதாகவும் அவர் உறுதி அளித்துள்ளார். திரு முனோஸின் நிலைப்பாடு முற்றிலும் மாறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
அந்தப் பயணி மூர்க்கத்தனமாக நடந்துகொண்டதால்தான் அவரை இழுத்துச் செல்லும் கட்டாயம் ஏற்பட்டதாக அவர் நேற்று முன்தினம் கூறியிருந்தார். சிக்காகோவிலிருந்து லூவிஸ்வில்லுக்குச் செல்லவிருந்த யுனைடெட் எர்லைன்ஸ் விமானத்தில் கடைசி நேரத்தில் அந்த நிறுவனத்தின் நான்கு ஊழியர்களுக்கு இடம் தேவைப்பட்டது. காலி இடம் ஏதும் இல்லாததால் நான்கு பயணிகளை வெளியேற்ற யுனைடெட் ஏர்லைன்ஸ் முடிவு செய்தது.