இறுதிக்குள் நுழைந்தது புனே

மும்பை: பத்தாவது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு ரைசிங் புனே சூப்பர்ஜயன்ட்ஸ் அணி தகுதி பெற்றது. லீக் சுற்றில் பத்து ஆட்டங்களில் வெற்றி பெற்று பட்டியலில் முதலிடம் பிடித்த மும்பை இந்தியன்ஸ் அணியும் ஒன்பது போட்டிகளில் வென்று இரண்டா மிடம் பிடித்த புனே அணியும் ‘பிளே ஆஃப்’ சுற்றின் ‘குவாலிஃபயர் 1’ ஆட் டத்தில் நேற்று முன்தினம் இரவு மோதின. வெல்லும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்பதால் இரு அணிகளும் வெற்றி முனைப்புடன் களம் புகுந்தன. முதலில் பந்தடித்த புனே அணி ராகுல் திரிபாதி (0), ஸ்டீவ் ஸ்மித் (1) எனத் தொடக்கத்திலேயே இரு விக்கெட்டுகளை இழந்தது. இருந்தாலும் 3வது விக்கெட்டுக்கு ரகானே=மனோஜ் திவாரி இணை 80 ஓட்டங்களைச் சேர்த்து நம்பிக்கை அளித் தது. ரகானே ஆட்டமிழந்ததும் களம்புகுந்த டோனி, 26 பந்துகளில் ஐந்து சிக்சருடன் 40 ஓட்டங்களை விளாசினார். இதனால் ஒரு கட்டத்தில் 150 ஓட்டங்களை எட்டுமா என்று கருதப்பட்ட புனே அணி, 20 ஓவர் முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 162 ஓட்டங்களை எடுக்க முடிந்தது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்வரிசை ஆட்டக்காரர்கள் மூவரை ஆட்டமிழக்கச் செய்த இளம் வீரர் வா‌ஷிங்டன் சுந்தரை (இடது) பாராட்டி ஊக்கப்படுத்தும் ரைசிங் புனே சூப்பர்ஜயன்ட்ஸ் அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித். படம்: ஏஎஃப்பி