பார்வையற்ற பெண்ணாக தன்‌ஷிகா

‘கபாலி’க்குப் பிறகு தன்‌ஷிகாவைத் தேடி நல்ல கதாபாத்திரங்கள் வருகின்றனவாம். அந்த வகையில் மலையாள படத்தில் பார்வையற்ற நடன மங்கையாக நடிக்க உள்ளார். அவருக்கு இது முதல் மலையாள படமாகும். அண்மையில் திரைக்கு வந்த `எங்க அம்மா ராணி’ படத்தில் 2 குழந்தைகளின் தாயாக நடித்தார் தன்‌ஷிகா. இதையடுத்து விக்ரம் நடிப்பில் தமிழ், இந்தியில் வெளியான `டேவிட்’ படத்தை இயக்கிய பிஜாபல் நம்பியார் இயக்கும் மலையாள படத்தில் நல்ல வேடம் அமைந்துள்ளது. ‘சோலோ’ என்னும் தலைப்புடன் உருவாகும் இப்படத்தில் துல்கர் சல்மான் நாயகனாக நடிக்க, அவருடைய ஜோடியாக தன்‌ஷிகா நடிக்கிறார். அதுமட்டுமல்ல, இதில் அவருக்கு பார்வையற்ற நடன மங்கை கதாபாத்திரமாம். இது தவிர சமுத்திரகனி இயக்கும் `கிட்ணா’ படத்தில் நடிக்கிறார் தன்‌ஷிகா. “இப்படி தொடர்ந்து நல்ல வாய்ப்புகள் தேடி வந்தால் ரசிகர்களின் ஆதரவு அதிகரிக்கும். அதன் மூலம் பலவற்றைச் சாதிக்க முடியும். ரசிகர்களின் ஆதரவே எனக்கு முக்கியம்,” என்கிறார் தன்‌ஷிகா.