இளையரின் ‘ரயில் நகரத்’தில் அமைச்சர் கோ

ரயில் ஆர்வலரான 19 வயது ஐசக் நாதனியெல் டி’சோசா (இடது) அமைத்துள்ள ‘ரயில் நகரத்தை’ தாம் பார்வையிட்டதாக போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். எஸ்எம்ஆர்டி ரயில் சேவைத் தூதுவரான ஐசக் இந்த ‘ரயில் நகரத்தை’ வீட்டில் தமது அறையில் அமைத்துள்ளார். இவர் செம்பவாங்கில் வசித்து வருகிறார். பல்வேறு மாதிரிகளில் ரயில்கள், ரயில் கட்டமைப்புகள் ஒன்பது ரயில் பாதைகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக ஐசக்கின் ‘ரயில் நகரம்’ இருப்பதாக செம்பவாங் குழுத்தொகுதியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினருமான திரு கோ பதிவு செய்துள்ளார்.

விடுதி, உணவு குடிபானத் துறையில் பல்வேறு பணிகளில் ஈடுபட்ட ஐசக், பிடித்தமான துறையில் பணிபுரிவதே நல்லது என்ற எண்ணத்தில் எஸ்எம்ஆர்டி நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். மூன்று வயதிலிருந்தே ரயில்கள் மீதான ஆர்வத்தை வளர்த்துக் கொண்டுள்ள ஐசக் இந்த ‘ரயில் நகரத்தை’ அமைக்க இரண்டு ஆண்டுகளே ஆனாலும் பயணிகளுக்கான ரயில் சேவையை அமைக்க சுமார் 14 ஆண்டுகள் பிடிப்பதாக தமது பதிவில் நகைச்சுவை ததும்பக் குறிப்பிட்டுள்ளார் அமைச்சர் கோ. படம்: போக்குவரத்து அமைச்சு