'கோலிவுட்', 'பாலிவுட்' படங்களில் நடித்த தனுஷ், 'தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகிர்' படத்தின் மூலம் 'ஹாலிவுட்'டிலும் தற்போது கால் பதித்துள்ளார். கனடா நாட்டைச் சேர்ந்த கென் ஸ்காட் இயக்கத்தில் காதல், நகைச்சுவை கலந்த படமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு இந்தியா, பெல்ஜியம், பாரிஸ் ஆகிய இடங்களில் நடைபெற இருக்கிறது. ஆர்ட்டிஸ்ட் திரைப்படத்தில் நடித்த 'ஹாலிவுட்' நடிகை பெரெனைஸ் பிஜோ முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் பகிர் எனும் கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கிறாராம். இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது.
தன்னுடைய தலைமுடியை மாற்றம் செய்து கொண்டு இந்தப் படத்தில் நடிக்கிறார் தனுஷ். மே 10ஆம் தேதியுடன் இவர் திரையுலகிற்கு வந்து 15 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இவர் முதன் முதலாக 'துள்ளுவதோ இளமை' என்ற படத்தில் நடித்தார். அப்போது 'இவரெல்லாம் ஒரு நடிகரா?' எனத் தனுஷைப் பற்றி விமர்சித்தார்கள். அனைத்து விமர்சனங்களையும் மீறி இன்று இந்திய அளவில் ஒரு சிறந்த கலைஞராக தனுஷ் வளர்ந்து நிற்கிறார். 'துள்ளுவதோ இளமை' படத்திற்குப் பிறகு அவர் நடித்து வெளிவந்த 'காதல் கொண்டேன்' படமும் பெரிய வெற்றியைப் பெற்றது.
மூன்றாவதாக வெளிவந்த 'திருடா திருடி' இன்னும் பெரிய வெற்றியைப் பெற்று, அவரை நம் வீட்டுப் பையன்களில் ஒருவராக பார்க்க வைத்தது. அடுத்துச் சில தோல்விகளைக் கடந்து மீண்டும் 'தேவதையைக் கண்டேன்' படம் மூலம் எழுந்து நின்றார். 'புதுப்பேட்டை' படம் தனுஷை வேறு ஒரு கட்டத்திற்குக் கொண்டு சென்றது. 'திருவிளையாடல் ஆரம்பம்' மீண்டும் ஒரு வணிக ரீதியில் வெற்றியைக் கொடுத்தது. வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த 'பொல்லாதவன்' தனுஷின் அந்தஸ்தை உயர்த்தியது. தொடர்ந்து 'யாரடி நீ மோகினி', 'படிக்காதவன்', 'குட்டி', 'உத்தமபுத்திரன்'' படங்கள் தனுஷின் நடிப்பைப் பற்றிப் பேச வைத்தன.