ஜப்பான் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்

தோக்கியோ: ஜப்பானில் உள்ள ஒரு முக்கிய ரயில் நிலையத்தில் சந்தேகத்திற்குரிய இரு பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த ரயில் நிலையம் நேற்று இரண்டு மணி நேரத்திற்கு மேலாக மூடப்பட்டதாக தோக்கியோ தகவல்கள் கூறின. பாதுகாப்பு கருதி ஹிகா‌ஷி ரயில் நிலையத்தில் இருந்த 250 பேர் வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். அந்த ரயில் நிலையத்தில் வெடிகுண்டு போன்ற சந்தேகத்திற்குரிய இரு பொருட்களைப் பார்த்ததாக 59 வயது பயணி ஒருவர் கூறியதைத் தொடர்ந்து ரயில் நிலையத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் போலிசாருக்குத் தகவல் கொடுத்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்த பயணிகள் வெளியேற்றப்பட்டதாகவும் அந்த ரயில் நிலையத்தில் காணப்பட்ட இரு பொருட்களையும் சோதனைக்காக அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளதாகவும் ரயில்வே அதிகாரிகள் கூறினர்.