கனிமொழி: இந்தியை திமுக எதிர்க்கவில்லை

வேலூர்: “திமுகவினர் இந்தியை எதிர்க்கவில்லை, இந்தித் திணிப்பைத்தான் எதிர்க்கிறோம்,” என திமுக மாநில மகளிர் அணிச் செயலாளரும் எம்பியுமான கனிமொழி பேசினார். இந்தித் திணிப்பை எதிர்த்தும் ‘நீட்’ தேர்வுக்கு விலக்கு அளிக்கக் கோரியும் வேலூர் மேற்கு மாவட்ட திமுக சார்பில் ஜோலார்பேட்டையில் நேற்று முன்தினம் கருத்தரங்கம் நடை பெற்றது. நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு கனிமொழி பேசினார். “இந்தியாவில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்ற நிலை இருக்கிறது. ஆனால், ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது ஆண்கள், பெண்கள், இளம் வயதினர் மெரினாவில் ஒன்றாக இணைந்து போராடினர்.

“இது இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகிற்கே கலாசாரத்தை எடுத்துக் கூறும் விதமாக அமைந்தது. பல மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்கள், மத்திய அரசை எதிர்த்து கேள்வி கேட்பதில்லை. தமிழகத்தில் உள்ள இன்னாள், முன்னாள் முதல்வர்கள் டெல்லிக்குச் சென்று வருகிறார்களே தவிர மக்களின் கஷ்டத்தைப் பற்றி எதுவும் எடுத்துக் கூறுவதில்லை. “திமுகவினர் இந்தியை எதிர்க்கவில்லை. ஆனால் இந்தியைப் படித்தே ஆக வேண்டும் என்ற திணிப்பைத்தான் எதிர்க் கிறோம்” என்று கனிமொழி கூறினார்.