படகுக்குள் பாய்ந்து 73 வயது மீனவரை காயப்படுத்திய சுறா

படகுக்குள் திடீரென்று பாய்ந்த சுறாமீன் படகிலிருந்த 73 வயது மீனவரின் கையைப் பிறாண்டிவிட்டது. ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் அந்த 200 கிலோ எடையுள்ள வெண்சுறா டெரி செல்வுட் என்னும் முதியவரைப் பலமாகத் தாக்கியதாக ‘ஏபிசி’ செய்தி தெரிவித்தது. கடல் நீரில் இருந்து படகுக்குள் பாய்ந்த சுறா, செல்வுட்டை படகினுள் தள்ளிவிட் டது. பின்னர் அழுத்தமாக உரசியதில் அவரின் முன்னங்கையில் தோல் உரிந்ததாக அச்செய்தி குறிப்பிட்டது. “படகு மோட்டாரின் உச்சிப் பகுதியைத் தாண்டி படகுக்குள் வந்து விழுந்த அந்த 2.7 மீட்டர் (சுமார் 8.8 அடி) நீள சுறா என்னைப் பார்த்துக்கொண்டு இருந்தது.

நானும் சுறாவைப் பார்த்தேன். பின்னர் அந்த சுறா பலமாக ஆட்டம் போட்டதாலும் மேலும் கீழும் அசைந்த தாலும் என்னால் அங்கிருந்து உடனடியாகத் தப்பித்து காப்பறைக்குச் செல்ல இயலவில்லை,” என்று செல்வுட் தெரிவித்தார். பின்னர் உதவி கேட்டு கடற்துறை மீட்புத் தொண்டூழியர்களுக்கு அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து அவர்கள் விரைந்து வந்து தம்மை மீட்ட பின்னர் இரண்டாம் முறை சென்று தமது படகையும் சுறாவையும் மீட்டதாக அவர் கூறினார். கடல் நீருக்கு மேல் சுறா வந்ததற்கான காரணம் எதுவும் தெரியவில்லை என்றும் அமைதியாக இருந்த கடல் பகுதியில் வேறு மீன்கள் தென்பட வில்லை என்றும் அவர் சொன்னார். தமது 60 ஆண்டு மீன் பிடித் தொழிலில் இப்போதுதான் முதல் முறையாக இதுபோன்ற சம்பவத்தைச் சந்தித்திருப்பதாகக் கூறிய செல்வுட்டின் கை தோல் உரிந்து வீங்கி இருந்தது.