பயிற்சியில் இந்தியா ஆதிக்கம்

லண்டன்: நியூசிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 45 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எட்டு நாடுகள் பங்குபெறும் சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நாளை மறுநாள் தொடங்குகிறது. ஆஸ்திரேலியா, பங்ளாதேஷ், நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகள் ‘ஏ’ பிரிவிலும் இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இலங்கை ஆகிய அணிகள் ‘பி’ பிரிவிலும் இடம்பெற்றுள்ளன.

இரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குத் தகுதிபெறும். இந்த நிலையில், பிரதான சுற்றுக்கு ஆயத்தமாகும் விதமாக தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகளைத் தவிர மற்ற ஆறு அணிகளும் தரப்புக்கு இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாடு கின்றன. இங்கிலாந்து- தென்னாப் பிரிக்கா அணிகளுக்கு இடையே ஒருநாள் போட்டித் தொடர் இடம் பெற்று வருகிறது. லண்டன் ஓவல் விளையாட்டு அரங்கில் நேற்று முன்தினம் நடந்த பயிற்சி ஆட்டத்தில் இந்தியாவும் நியூசிலாந்தும் மோதின. பூவா தலையாவில் வென்று முதலில் பந்தடித்த நியூசிலாந்து அணி தொடக்கம் முதலே அதிரடி யாக ஆடி ஓட்டங்களைக் குவிக்க முயன்றது. ஆனால், அம்முயற்சி பலிக்கவில்லை. விக்கெட்டுகள் தான் விரைவில் சரிந்தன.