சுடச் சுடச் செய்திகள்

ஜெயலலிதாவின் 68 சொத்துகள் பறிமுதல்

சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்குச் சொந்தமான 68 சொத்துகளைப் பறிமுதல் செய்யும் நடவடிக்கையைத் தமிழக அரசு தொடங்கி இருக்கிறது. சென்னை, காஞ்சிபுரம், திரு வள்ளூர் உள்ளிட்ட ஆறு மாவட் டங்களில் உள்ள, ஆறு நிறுவனங் களுக்குச் சொந்தமான அந்த 68 சொத்துகளைக் கையகப்படுத்தும் நடவடிக்கைகளைத் தொடங்கும் படி சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில லஞ்ச ஊழல் கண்காணிப்பு ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

பறிமுதல் செய்யப்படவுள்ள நிலங்கள் பல நூறு கோடி ரூபாய் மதிப்பு பெறும் என்று லஞ்ச ஊழல் கண்காணிப்பு ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன. சம்பந்தப்பட்ட நிலங்களை அடையாளம் கண்டதும் அவை ‘தமிழக அரசுக்குச் சொந்தமா னவை’ என்று வருவாய்த்துறை யால் அறிவிப்புப் பலகை வைக்கப் படும். அத்துடன், அந்த இடங்கள் தொடர்பாக எந்தப் பரிவர்த்தனை யும் இடம்பெறக்கூடாது என்று பத்திரப் பதிவுத் துறையும் அறிவுறுத்தப்படும். வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கில் 128 சொத்துகள் தொடர்புபடுத்தப் பட்டபோதும் அவற்றுள் 68 சொத்துகள் மட்டுமே பறிமுதல் செய்யப்படவுள்ளன.