பாரிஸ் பருவநிலை உடன்பாட்டிலிருந்து விலகியது அமெரிக்கா

பாரிஸ்: இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாரிஸ் நகரில் காணப்பட்ட பருவநிலை உடன்பாட்டிலிருந்து அமெரிக்கா விலகுவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து உலக நாடுகள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளன. திரு டிரம்ப்பின் முடிவை பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கனடா, மெக்சிகோ, அர்ஜென்டினா உள்ளிட்ட பல நாடுகள் கடுமை யாகச் சாடியுள்ளன. திரு டிரம்ப்பின் இந்த முடிவு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத் திருப்பதாக ஐநா தலைமைச் செயலாளரின் பேச்சாளர் கூறியுள் ளார். அமெரிக்காவின் இந்த முடிவு வருந்தத்தக்கது என்றும் பாரிஸ் பருவநிலை உடன்பாடு மிகவும் முக்கியமானது என்றும் ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகள் கூட்டறிக்கையில் தெரி வித்துள்ளன. ஜப்பானிய சுற்றுச்சூழல் அமைச்சர் கொய்சி யமாமோட்டோ, ஜப்பானின் ஏமாற்றத்தையும் சினத் தையும் வெளிப்படுத்தியுள்ளார். திரு டிரம்ப்பின் முடிவு குறித்து மிகவும் வருந்துவதாக ஜெர்மன் பிரதமர் மெர்க்கல் கூறியுள்ளார். பாரிஸ் பருவநிலை உடன்பாடு எதிர்காலத் தலைமுறையினருக்கு பாதுகாப்பான ஒன்று என்று பிரிட்டிஷ் பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார்.

பருவநிலை உடன்பாட்டிலிருந்து அமெரிக்கா விலகுவதாக திரு டிரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து அவரது அந்த முடிவுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ள வேளையில் அமெரிக்காவில் குடியரசுக் கட்சி மூத்த உறுப் பினர்களும் நிலக்கரி சுரங்கத் தொழில் துறையினரும் அவரது அந்த நடவடிக்கையைப் பாராட்டியுள்ளனர்.