இந்திய அணி அதிருப்தி

பர்மிங்ஹம்: சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடரில் நாளை பரம எதிரியான பாகிஸ்தானுடன் இந்திய அணி மோதவிருக்கிறது. இந்நிலையில், போட்டி நடக்கவுள்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் திடலில் இந்திய அணிக்கான பயிற்சி ஏற்பாடுகளைக் கண்டு அணித்தலைவர் கோஹ்லியும் பயிற்றுவிப்பாளர் கும்ளேவும் அதிருப்தி அடைந்தனர். பிரதான திடலில் நேற்று ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகள் மோதவிருந்ததால் அங்கு பயிற்சியில் ஈடுபட இந்திய அணியினர் அனுமதிக்கப்படவில்லை. மாறாக, அரங்கிற்கு வெளியே இருக்கும் சிறிய பயிற்சித் திடலில் இந்திய அணியினருக்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.

வேகப்பந்து வீச்சாளர்கள் ஓடி வந்து பந்துவீச அந்த இடம் போதுமானதாக இல்லை எனக் கூறப்பட்டது. இதையடுத்து, இந்திய அணி நிர்வாகி கபில் மல்ஹோத்ரா மூலம் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண முயற்சி எடுக்கப்பட்டது. ஆனாலும், இந்திய அணியினர் பிரதான அரங்கில் பயிற்சியில் ஈடுபட இடம் அளிக்கப்படவில்லை. நேற்று போட்டி முடிந்துவிட்டதால் இன்று முதல் அவர்கள் அங்கு பயிற்சியில் ஈடுபடலாம். மாறாக, கடந்த இரு வாரமாக பாகிஸ்தான் வீரர்கள் அங்கு முகாமிட்டுள்ளதால் பிரதான பயிற்சித் திடலை அவர்கள் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது.