பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: விராத் கோஹ்லி பாராட்டு

பர்மிங்ஹம்: சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அதன் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை 124 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. பர்மிங்ஹமில் நடைபெற்ற அந்த ஆட்டத்தில் இந்தியா முதலில் பந்தடித்தது. அது 48 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 319 ஓட்டங்கள் குவித்தது. ரோகித் சர்மா 91 ஓட்டங்களும் (7 பவுண்டரிகள், 2 சிக்சர்கள்) அணித் தலைவர் விராத் கோஹ்லி 68 பந்துகளில் 81 ஓட்டங்களும் (6 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்), தவான் 68 ஓட்டங்களும் (6 பவுண்டரிகள், 1 சிக்சர்கள்), யுவராஜ் சிங் 32 பந்துகளில் 53 ஓட்டங்களும் (8 பவுண்டரிகள், 1 சிக்சர்) எடுத்தனர். பாகிஸ்தானின் அசார் அலி, சதாப் கான் தலா ஒரு விக்கெட் சாய்த்தனர்.

இந்திய அணி விளையாடும் போது மழை பெய்ததால் ‘டக்வொர்த் லூவிஸ்’ விதிப்படி பாகிஸ்தானுக்கு 48 ஓவர்களில் 325 ஓட்டங்கள் இலக்கு நிர்ண யிக்கப்பட்டது. பாகிஸ்தான் பந்தாடியபோது ஐந்தாவது ஓவரில் மழையால் ஆட்டம் மீண்டும் தடைப்பட்டது. இதனால் 41 ஓவர்களில் 289 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயிக்கப் பட்டது. இந்திய வீரர்களின் அபாரமான பந்துவீச்சால் பாகிஸ்தான் அணி விக்கெட்டுகளை மளமள என்று பறிகொடுத்தது. அந்த அணி 33.4 ஓவர்களில் 164 ஓட்டங்களில் சுருண்டது. இதனால் இந்தியா 124 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பாகிஸ்தானின் தொடக்க வீரர் அசார் அலி அதிகபட்சமாக 50 ஓட்டங்களும் முகம்மது ஹபீஸ் 33 ஓட்டங்களும் எடுத்தனர். இந்தியாவின் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளும் ஹார்த்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளும் புவனேஸ்வர் குமார் ஒரு விக்கெட்டும் கைப் பற்றினார்கள்.

 

பாகிஸ்தான் அணியைத் திணறடித்த கோஹ்லி, யுவராஜ் சிங் ஜோடி. படம்: ஏஎஃப்பி