மணமுடிக்க மறுத்த காதலன்: சிலம்பு ஏந்தி புகாரளித்த பெண்

மதுரை: திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தன்னைக் காதலித்து கைவிட்ட இளையர் மீது அவரது காதலி புகார் அளித்துள்ளார். நேற்று முன்தினம் கோமதி என்ற அந்த இளம் பெண் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத் துக்கு கையில் சிலம்புடன் கண்ணகியைப்போல் புகார் மனு அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. செல்லூர் பகுதியைச் சேர்ந்த 28 வயதான கோமதி, தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வருகிறார். அவருக்கும் மதுரை கோவலன் நகரைச் சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக இருவரும் நெருக்கமாகப் பழகி, காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் கோமதி இரு முறை கருவுற்று பின்னர் கருக் கலைப்பும் செய்துள்ளார். இந்நிலையில், திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைகளைக் கூறி உல்லாசம் அடைய வைத்த கார்த்திக், திடீரென கோமதியைத் திருமணம் செய்துகொள்ள இயலாது என கூறியுள்ளார். இந்நிலையில் திருமணப் பேச்சை எடுத்தால் தன் காதலன் கொலை மிரட்டல் விடுப்பதாகக் குறிப்பிட்டு, மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார் கோமதி. இதற்காக நேற்று முன் தினம் அவர் புடவை அணிந்து, கையில் ஏந்திய சிலம்புடன் கோபமாக ஆட்சியர் அலுவலகம் வந்தார். புகார் மனு அளித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தன் காதலர் மீது காவல் துறையில் நேரடியாகவும் தபால் மூலமாகவும் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை எனத் தெரிவித்தார். கண்ணகி வேடத்தில் புகார் மனு அளிக்க வந்த அவரால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.

ஆட்சியர் அலுவலகத்துக்கு கண் ணகி போல் கையில் சிலம்பேந்தி வந்த கோமதி. படம்: ஊடகம்