கூடுதல் விலைக்கு மணலை விற்போர் மீது கடுமையான நடவடிக்கை

புதுக்கோட்டை: தமிழகத்தில் கட்டுமான மணலை அதிக விலைக்கு விற்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி எச்சரித்துள்ளார். புதுக்கோட்டையில் புதிய மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஒன்றைத் திறந்து வைத்துப் பேசிய முதல்வர், “பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, கட்டுமானப் பணிகளுக்குத் தடையின்றி எளிதாக மணல் கிடைக்கும் வகையில் மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்தி வருகிறது.

“தற்போது செயல்பட்டு வரும் 28 மணல் குவாரிகளில் இருந்து தினமும் சுமார் 5,000 லாரி மணல் பொதுப்பணித்துறை மூலம் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருவதாகக் கூறினார். இன்னும் ஒரு சில மாதங்களில் கூடுதல் மணல் குவாரிகளைத் திறந்து பொதுமக்களுக்குத் தங்கு தடையின்றி மணல் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். “மணல் குவாரிகளில் 2 யூனிட் மணல் ரூ.1,050 என்ற விலைக்கு விற்கப்பட்டு வருகிறது. “எனவே யாரேனும் அதிக விலை வைத்து பொதுமக்களுக்கு மணல் விற்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று முதல் அமைச்சர் பழனிசாமி எச்சரித்துள்ளார்.