சென்னை சில்க்ஸ் கட்டட இடிப்புப் பணி: ஒருவர் பரிதாப பலி

சென்னை: பெரும் தீ விபத்துக்குப் பின்னர் சென்னை சில்க்ஸ் கட்டடம் இடிக்கப்பட்டு வரும் நிலையில், இந்தப் பணியில் ஈடுபட்டிருந்தபோது தொழிலாளி ஒருவர் விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து, கட்டட இடிப்புப் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. கடந்த மாதம் 31ஆம் தேதி சென்னை சில்க்ஸ் இயங்கி வந்த கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்தது. இதன் காரணமாக அந்தக் கட்டடத்தை இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக பயன்படுத்தப்படும் இயந்திரம் சரியாக வேலை செய்யவில்லை என்று தெரிகிறது. நேற்று முன்தினம் கோளாற்றைச் சரி செய்ய தொழிலாளர்கள் முயன்றபோது, கட்டட இடிபாடுகள் கீழே விழுந்தன. இதில் இயந்திர ஓட்டுநரின் உதவியாளர் சரத் என்பவர் பலத்த காயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார்.