பணம், கவர்ச்சி இரண்டுமே வேண்டாம் - ஊர்வசி ராதேலா

பொதுவாக அதிக சம்பளம் கொடுத்தால் கூடுதல் கவர்ச்சி காட்ட நடிகைகள் தயங்குவதில்லை எனக் கூறப்படுவதுண்டு. ஆனால் இத்தகைய கூற்று பொய் என்பதை நிரூபித்துள்ளார் இளம் நாயகி ஊர்வசி ராதேலா. 23 வயதான இவர் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று அழகிப் பட்டம் வென்றவர். தற்போது கன்னடத்தில் உருவாகி வரும் ‘அப்ராவதா’ படத்தில் நடித்து வருகிறார். அண்மையில் ‘ஹேட் ஸ்டோரி 4’ என்ற இந்திப் படத்தில் நடிக்கக் கேட்டு ஊர்வசியை அணுகினராம் அப்படக் குழுவினர். மொத்தமாக 5 கோடி ரூபாய் சம்பளம் தருவதாகவும் கூறியுள்ளனர். ஆனால் ஊர்வசியோ... “படுகவர்ச்சியாக இருக்கும் இந்தக் கதாபாத்திரத்தில் நான் நடிக்க விரும்பவில்லை. குடும்பப் பாங்கான வேடம் உள்ள படங்களில் மட்டுமே நடிக்க விரும்புகிறேன். உங்கள் பணமும் வேண்டாம், படமும் வேண்டாம்,” என ஒரே போடாகப் போட்டுவிட்டாராம். பிறகென்ன... அம்மணிக்குப் பாராட்டுகள் குவிகின்றன.