இலங்கையில் தமிழர்கள் நன்றாக உள்ளனர்: அமைச்சர் தகவல்

சென்னை: இலங்கையில் தமிழர்கள் நன்றாக உள்ளனர் என்று அந்நாட்டின் கல்வி அமைச்சர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னைக்கு வருகை புரிந்துள்ள அவர், செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கைத் தமிழர்களின் நிலங்களும் வீடுகளும் அவர்களிடமே திரும்ப ஒப்படைக்கப்பட்டு வருவதாகக் கூறினார். இலங்கையில் தற்போது அமைதியான சூழ்நிலை நிலவுவதாகக் குறிப்பிட்ட ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் உள்ள சில தலைவர்கள் அந்த உண்மையை மறைத்து, தங்களது அரசியல் லாபத்துக்காக தவறான தகவல்களைப் பரப்பி வருவதாகச் சாடினார். தமிழக அகதி முகாம்களில் இருக்கும் ஈழத் தமிழர்கள் விருப்பப்பட்டால் இலங்கைக்குத் திரும்பி மீண்டும் அங்கு குடியேறலாம் என்றார் அவர்.