சிங்கப்பூரில் ஆயுர்வேத தகவல் மையம்

ஆயுர்வேத மருத்துவத் தகவல்கள், மருந்துகள், குறிப்புகளை ஒரே இடத்தில் தெரிந்துகொள்ள புதிய தகவல் மையம் ஒன்று சிங்கப்பூரில் அறிமுகமாகிறது. இரண்டாவது ஆண்டாக நேற்று நடந்த அனைத் துலக ஆயுர்வேத மாநாட்டில் சிங்கப்பூருக்கான இந்திய தூதர் திரு ஜாவீத் அஷ்ரஃப் இதனை அறிவித்தார். ஆயுர்வேத விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கில் இந்தியா வின் ‘ஆயுஷ்’ அமைச்சு பல ஆண்டுகளுக்கு முன் தோற்று வித்த ‘ஆயுஷ் செல்’ எனும் ஆயுர் வேத தகவல் மையம், ஐரோப்பா, சுவிட்சர்லாந்து, வெனிசுவேலா, ரஷ்யா, மொரி‌ஷியஸ், சீனா, மலேசியா என மொத்தம் 24 நாடுகளில் செயல்பட்டு வருகிறது. இந்தப் பட்டியலில் இப்போது சிங்கப்பூரும் இணைகிறது. அனைத்துலக யோகா தினத் தில் ஆயுர்வேத மாநாடு நடைபெறு வது பெருமிதம் அளிக்கிறது என்ற திரு ஜாவீத், யோகா ஈடுபாட் டில் சிங்கப்பூர் தலைசிறந்து விளங்குகிறது எனப் புகழ்ந்தார். கல்வி மற்றும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுகளுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாள ரான இணைப் பேராசிரியர் டாக்டர் முகம்மது ஃபைசால் இப்ராஹிம் ஆயுர்வேத மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

சிங்கப்பூரில் நேற்று நடந்த அனைத்துலக ஆயுர்வேத மாநாட்டில் (இடமிருந்து) சிங்கப்பூர் ஆயுர்வேத மருத்துவர்கள் சங்கத் தலைவர் டாக்டர் ரவி இந்துசேகர், நாடாளுமன்ற உறுப்பினர் திரு முரளி பிள்ளை, சிங்கப்பூருக்கான இந்திய தூதர் திரு ஜாவீத் அஷ்ரஃப், இந்தியாவின் ஆயுஷ் அமைச்சைச் சேர்ந்த டாக்டர் பிரதீப் துவா, கல்வி மற்றும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுகளுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளரான இணைப் பேராசிரியர் டாக்டர் முகம்மது ஃபைசால் இப்ராஹிம், மலேசிய சுகாதார அமைச்சின் பாரம்பரிய மருத்துவ பிரிவின் இயக்குநர் டாக்டர் கோ செங் சூன். படம்: திமத்தி டேவிட்