இலவச பயணத் திட்டம் நீட்டிப்பு

உச்ச நேரம் அல்லாத மற்ற வேளைகளில் ரயில்களில் பயணம் செய்வதை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை பொதுப் போக்குவரத்து மன்றம் மறுஆய்வு செய்யும் என்று போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. உச்ச நேரத்திற்கு முன் இலவசமாகப் பயணம் செய்யும் திட்டம் 2013லும் உச்ச நேரம் அல்லாத பயண அட்டைத் திட்டம் 2015லும் அறிமுகம் கண்டன. பொதுப் போக்குவரத்தில் உச்ச நேரத்தின்போது பயணிகள் நெரிசலைக் குறைக்கும் நோக்கில் இந்த சோதனை முயற்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

இலவச பயணத் திட்டம் இம்மாதத்துடனும் உச்ச நேரம் அல்லாத பயண அட்டைத் திட்டம் அடுத்த மாதத்துடனும் முடிவுற இருந்த நிலையில் அவை இந்த ஆண்டு இறுதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனுடன், புதிய எம்ஆர்டி வழித்தடங்கள், கூடுதல் ரயில்கள், பேருந்துகள் போன்ற பொதுப் போக்குவரத்துக் கொள்ளளவை மேம்படுத்தும் நடவடிக்கைகளும் அமல்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சு கூறியது. 2013 முதல் மூன்று கட்டங்களாக அறிமுகம் கண்ட டௌன்டவுன் வழித்தடம் இவ்வாண்டின் பிற்பகுதியில் முழுமையாகச் செயல்பாட்டிற்கு வரும். டௌன்டவுன் வழித்தடத்தால் சிங்கப்பூர் எம்ஆர்டி கட்டமைப்பின் நீளம் மேலும் 42 கி.மீ. அதிகரிக்கும்.

இந்த ஆண்டிற்குள் வடக்கு=தெற்கு ரயில் பாதையிலும் அடுத்த ஆண்டிற்குள் கிழக்கு=மேற்கு ரயில் பாதையிலும் சமிக்ஞை மேம்பாடுகள் நிறைவுபெறும். இதன்மூலம், தேவைப்பட்டால் அவ்விரு தடங்களிலும் உச்ச நேரங்களில் 20% கூடுதலாக ரயில்களை இயக்க முடியும். 2011 முதல் எம்ஆர்டி கட்டமைப்பில் 112 ரயில்களும் எல்ஆர்டி கட்டமைப்பில் 29 ரயில் வண்டிகளும் கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளன. 2019ஆம் ஆண்டிற்குள் புதிதாக மேலும் 22 ரயில்கள் சேர்க்கப்படும்.