$265,270 மதிப்புள்ள போதைப் பொருள் சிக்கியது

மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் (சிஎன்பி) நேற்று முன்தினம் $265,270 மதிப்புள்ள போதைப் பொருளைக் கைப்பற்றினர். அதில் 3.5 கிலோ கிராம் ஹெராயி னும் அடங்கும். சிலோன் ரோட்டில் உள்ள ஒரு தனியார் அடுக்குமாடி வீட்டில் ‘சிஎன்பி’ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்திய போது, இந்த போதைப் பொருள் சிக்கியது. இதன் தொடர்பில் போதைப் பொருள் கடத்தல்காரர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் அந்த வீட்டில் தங்கியிருந்த மூவர் கைது செய்யப்பட்டனர். சிங்கப்பூரர்களான இந்த மூவரில் இருவர் ஆடவர்கள். அவர்களின் வயது 43, 44. மற்றொருவரான பெண்ணுக்கு வயது 39. அவர்களிடமிருந்து 3.5 கிலோ கிராம் ஹெராயின், 44 கிராம் கனபிஸ், சிறிய அளவிலான எரிமின்-5 மற்றும் எக்ஸ்டசி மாத்திரைகள், ஒரு போத்தல் மெதடோன் ஆகியவை கைப்பற்றப்பட்டன. 15 கிராம் அளவிலான கலப்பில்லாத ஹெராயின் அல்லது 500 கிராம் அளவிலான கனபிஸ் கடத்தப்பட்டால் சம்பந்தப்பட்டவருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.