கோபுரமாய் உயர்ந்து நிற்கும் நாயகன் விஜய்சேதுபதி

இன்றைய கால கட்டத்தில் ஒரு முன்னணி கதாநாயகனைச் சந்திப்பது என்பது தலைகீழாக நின்று தண்ணீர் குடிப்பது போல கஷ்டமான விஷயம். அதுவும் ஒரு புதுமுக இயக்குநர் அவரிடம் கதையைச் சொல்லி அவரின் சம்மதத்தைப் பெறுவது என்பது கனவிலும் நடக்காத சம்பவம். ஆனால் இவை அனைத்தும் நமது நாயகன் விஜய் சேதுபதியிடம் எளிதாக நடைபெறும். ஒரு புதுமுக இயக்குநர் அண்மையில் விஜய் சேதுபதியைச் சந்தித்து கதை சொல்லியிருக்கிறார். அவர் சொன்ன கதையும், சொன்ன விதமும் நமது நாயகன் விஜய் சேதுபதிக்குப் பிடித்துப் போய்விட்டது. விஜய் சேதுபதிக்கும் அவரின் இயக்கத்தில் நடிக்கவேண்டும் என்று ஆசை.

ஆனால் அதில் ஒரு சிக்கல். அதிக படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டு இரவு பகல் என்று பாராமல் நடித்துக்கொண்டு இருக்கிறார் விஜய் சேதுபதி. அடுத்த வருடம் வரை அவர் நடிக்கும் படங்கள் வரிசைக் கட்டி நிற்கின்றன. தன்னால் அவருடைய படத்தில் உடனே நடிக்க முடியாது என்று தெரிந்த விஜய் சேதுபதிக்கோ அந்த புது இயக்குநரின் மனதை உடைக்க மனமில்லை. அதனால் அவரிடம், “எனக்கு இந்தக் கதை பிடித்திருக்கிறது. ஆனால், நிறைய படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறேன். அதனால், என்னால் இப்போதைக்கு ‘கால்‌ஷீட்’ தரமுடியாது. அதற்காக உங்களைப் போன்ற நல்ல இயக்குநர்களைக் காக்க வைக்கவும் முடியாது.

“நானே ஒரு கோடி ரூபாய் தருகிறேன். புதுமுகங்களை வைத்துப் படம் எடுங்கள். படம் நன்றாக இருந்தால் நானே வெளியீடு பண்ணித் தருகிறேன். அதற்குள் நானும் சில படங்களில் நடித்து முடித்து இருப்பேன். பிறகு உங்களுடைய இயக்கத்தில் நான் கட்டாயம் நடிக்கிறேன். தயவுசெய்து தவறாக நினைக்காதீர்கள்” என்று சொல்லியிருக்கிறார் விஜய் சேதுபதி. அதைக் கேட்டதும், இயக்குநராக அறிமுகமாகவிருக்கும் அந்த நபருக்குக் கண்கலங்கி விட்டதாம். அவருடைய இந்த நல்ல செயலால் நல்ல நடிகர் என்று பெயரெடுத்திருந்த விஜய் சேதுபதி, நல்ல மனிதன் என்ற பெயரையும் பெற்று கோபுரமாய் உயர்ந்து நிற்கிறார்.

இவர் தற்பொழுது மாதவனுடன் இணைந்து நடித்து வரும் படம் ‘விக்ரம்- வேதா’. விக்ரமாதித்தன் வேதாளம் கதையை நவீனத்துக்கு மாற்றி இருக்கிறோம் என்கிறார் இந்தப் படத்தின் இயக்குநர்களான புஷ்கர்- காயத்ரி தம்பதிகள். விக்ரம் என்கிற இன்ஸ்பெக்டர் வேடத்தில் மாதவன். வேதா என்கிற வடசென்னை குண்டர் கும்பலைச் சேர்ந்தவராக விஜய் சேதுபதி. இரண்டு வலுவான நபர்கள். வேதா ஒவ்வொரு முறை குற்றம் செய்யும்போதும் விக்ரம் அவரை கைது செய்கிறார். அப்போது வேதா அவருக்கு ஒரு கதை சொல்வார். அந்தக் கதையில ஒரு தர்மம் இருக்கும். அதற்குப் பிறகு அவர் அதிலிருந்து தப்பிப்பார். மீண்டும் பிடிபடும்போதும் இதுபோல மீண்டும் ஒரு கதை சொல்லி தப்பிப்பார். இது இரண்டு பேருக்கும் இடையே நடக்கிற ஆடு புலி ஆட்டம் என்று சொல்லலாம். நாங்கள் இதை விக்ரமாதித்தன் வேதாளமாக மாற்றியிருக்கிறோம்,” என்கின்றனர் இயக்குநர் தம்பதிகள். படத்தின் கதை மிகவும் சுவாரசியமாக இருப்பதால் படத்தின் வரவுக்காக காத்திருக்கின்றனர் விஜய் சேதுபதியின் ரசிகர்கள்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

“நான் யாருடன் இருந்தால் உங்களுக்கு என்ன? அதை நான் ஏன் உங்களிடம் சொல்ல வேண்டும். அது என்னுடைய தனிப்பட்ட விஷயம். நான் தனியாக இருந்தாலும் வேறு யாருடன் இருந்தாலும் அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்,” என்றார் அமலா பால்.

20 Jul 2019

மறுமணத்திற்குத் தயாராகும் அமலா பால்