ரமலான்: பசி அகலும், நட்பு மலரும்

வில்சன் சைலஸ்

முஸ்லிம்கள் பலரும் உற்றார் உறவினர்களுடன் நோன்புப் பெருநாளை இன்று கொண்டாடும் வேளையில், சிங்கப்பூரில் வாழும் வெளிநாட்டு ஊழியர்கள், தங்கும் விடுதியில் சமைத்து நண்பர்களுடன் அளவளாவி பெருநாள் பொழுதை மகிழ்ச்சியாகக் களிக்கின்றனர். அன்புக்குரியவர்கள் அருகில் இல்லாதது வருத்தமளித்தாலும் தொழில்நுட்பத்தின் உதவியால் பண்டிகை நாட்களை உற்சாகமாகக் கழிப்பதில் சிரமமில்லை என்பது ஊழியர்களின் கருத்து.

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 45 வயது திரு முகமது ஷெயிக் மைதீன், கடந்த 18 ஆண்டுகளாக சிங்கப்பூரில் வேலை செய்கிறார். கடைசியாக அவர் நோன்புப் பெருநாளைக் குடும்பத்தினருடன் கொண்டாடியது ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்கு முன். சிங்கப்பூரில் வேலை செய்யும் இதர உறவினர்களுடன் வெளியே செல்வதுடன் தங்கும் விடுதியில் இருந்து ஓய்வெடுப்பதற்கும் நோன்புப் பெருநாள் விடுமுறையை இவர் பயன்படுத்துகிறார். கடல் கடந்து வாழும் உறவினர்கள் அருகில் இருக்கும் உணர்வை ‘வாட்ஸ்அப்’, ‘ஐஎம்ஓ’, ‘ஸ்கைப்’ போன்ற திறன்பேசிச் செயலிகள் ஏற்படுத்துவதால் நோன்புப் பெருநாளை மகிழ்ச்சியாகக் களிக்க முடிகிறது என்றார் திரு மைதீன்.

“பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு முன் $10 பெருமானமுள்ள தொலைபேசி அட்டைகளின் மூலம்தான் வெளி நாடுகளுக்குத் தொடர்புகொள்ள முடியும். அதிக பட்சம் பத்து நிமிடம்தான் பேசலாம். அதற்குள் பணம் தீர்ந்துவிடும்,” என நினைவுகூர்ந்த அவர், உறவினர்கள் பலருக்கு வாழ்த்துகூட சொல்ல முடியாத சூழல் அப்போது இருந்தது என்றார். இன்று பெரும்பாலான தங்கும் விடுதியில் உள்ள இலவச வைஃபை வசதி ஊழியர்களின் பண்டிகை நாட்களுக்கு மேலும் சிறப்பு சேர்த்துள்ளதாகச் சொன்ன திரு மைதீன், “தங்கும் விடுதியின் ஆதரவு வருத்தத்தை மறக்க உதவுகிறது,” என்றார். மாதம் முழுவதும் நோன்பு இருந்த முஸ்லிம் ஊழியர்களுக்குச் சிறப்பு வசதிகளுக்கு ஏற்பாடு செய்தது காக்கி புக்கிட்டில் அமைந்துள்ள ‘மினி என்வைர ன்மெண்ட் சர்வீஸ்’ நிறுவனத்தின் ‘தி லியோ’ தங்கும் விடுதி. ஒவ்வொரு நாளும் நோன்பு வைக்கும் முஸ்லிம் ஊழியர்களுக்கு அதிகாலையில் உணவு வழங்கியதுடன் நோன்பு துறப்பதற் கும் தனது வளாகத்தின் விளையாட்டு மைதானத்தில் கூடாரம் அமைத்து தந்தது ‘லியோ’ விடுதி.

ரமலான் மாதத்தின் இறுதி நாளான நேற்று அப்துல் கஃபூர் பள்ளிவாசலில் கிட்டத்தட்ட 1,000க்கும் மேற்பட்டோர் திரண்டு நோன்பு திறந்தனர். படம்: திமத்தி டேவிட்