சுடச் சுடச் செய்திகள்

உண்டியல் காசை லஞ்சமாகக் கொடுத்து நீதி கேட்ட சிறுமி

இந்தியாவில் லஞ்சம் கொடுத்தால்தான் அரசுத் துறையில் எந்த வேலையும் நடக்கும் என்பது ஆறு வயது சிறுமிக்குக்கூட தெரிந்திருக்கிறது. உத்தரப் பிரதேச மாநிலம், மீரட் மாவட்டத்தைச் சேர்ந்த சீமா கௌசிக் என்பவருக்கும் சஞ்சீவ் குமார் என்பவருக்கும் ஏழு ஆண்டுகளுக்குமுன் திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பின் கணவரும் அவரது குடும்பத்தினரும் வரதட்சணை கேட்டு சீமாவைத் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, நான்கு ஆண்டுகளுக்குமுன் கணவர் வீட்டிலிருந்து வெளியேறிய சீமா, மகள் மான்வியை அழைத்துக்கொண்டு பிறந்த வீட்டிற்கே சென்றார். அதன்பின்னும் கணவர் குடும்பத்தார் சீமாவைத் தொந்தரவு செய்ததாக அவரின் தந்தை ஸ்வரூப் குற்றம்சாட்டினார்.

இதனால் பெரும் மனவுளைச்சலில் இருந்த சீமா கடந்த ஏப்ரல் மாதம் தன்னுயிரை மாய்த்துக்கொண்டார். இதையடுத்து, சீமாவின் கணவர் சஞ்சீவ் குமார், அவரது இரு சகோதரர்கள், தந்தை ஆகியோர் மீது திரு ஸ்வரூப் போலிசில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து சஞ்சீவ் குமாரை போலிஸ் கைது செய்தது. ஆனால், மற்ற மூவரும் கைது செய்யப்படாததால் அவர்கள் சுதந்திரமாக வெளியில் உலவுகின்றனர். அவர்களையும் கைது செய்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டுமெனில் லஞ்சம் தரவேண்டும் என்று போலிசார் கேட்டதாகத் திரு ஸ்வரூப் குற்றம் சுமத்தினார்.

இந்த விவரங்களைத் தன் பேத்தி மான்வியிடம் அவர் கூற, ‘லஞ்சம் கொடுத்தால்தான் எதுவும் நடக்கும்’ என்பதை அவள் புரிந்துகொண்டாள். சில நாட்களுக்குமுன் தன் மகளின் மரணம் குறித்து மாவட்டக் காவல்துறை உயரதிகாரியிடம் முறையிட திரு ஸ்வரூப் சென்றபோது உடன் சென்ற மான்வி, தான் உண்டியலில் சேர்த்த பணத்தை போலிஸ் உயரதிகாரியிடம் கொடுத்து, “எப்படியாவது என் தாயின் மரணத்திற்குக் காரணமானவர்களுக்குத் தண்டனை பெற்றுத் தாருங்கள்,” என வேண்டினாள். அதைக் கேட்டு கண்கலங்கிய அதிகாரி ராம் குமார், சீமா வழக்கை முழுமையாக விசாரித்து, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். பின் அவர் அந்த உண்டியலை மான்வியிடமே திருப்பித் தந்தார். ஆயினும், காவல் நிலைய வாசலில் அதைப் போட்டு அச்சிறுமி அழுதது பார்த்தவர்கள் நெஞ்சத்தை உறைய வைத்தது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon