ஐன்ஸ்டைன், ஹாக்கிங்கை மிஞ்சிய இந்திய வம்சாவளி சிறுவன்

உலகின் சிறந்த மேதைகளாகக் கருதப்படும் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், ஸ்டீஃபன் ஹாக்கிங் ஆகியோரை விட அறிவுக்கூர்மை உடையவன் என்ற பெருமையைப் பெற்றுள்ளான் அர்னவ் சர்மா (படம்) என்ற 11 வயதுச் சிறுவன். தெற்கு இங்கிலாந்தில் உள்ள ரெடிங் நகரத்தில் வசிக்கும் இந்த இந்திய வம்சாவளி சிறுவனின் ‘ஐக்யூ (IQ)’ 162. ஒரு மனிதனின் அறிவுத் திற னைக் குறிப்பிடுகிறது இந்த எண். ஐன்ஸ்டைன், ஹாக்கிங் ஆகி யோரின் ‘ஐக்யூ’ 160தான். சில வாரங்களுக்குமுன் நடந்த மென்சா ‘ஐக்யூ’ தேர்வில் அர்னவ் பங்கேற்றான். மிக மிகக் கடின மானதாகக் கருதப்படும் இந்தத் தேர்விற்காக இவன் தன்னைத் துளிகூட ஆயத்தப்படுத்திக் கொள்ளவில்லை என்பதுதான் வியப்புக்குரிய செய்தி.

அத்துடன், அந்தத் தேர்வு எப்படி இருக்கும் என்பதையாவது பழைய கேள்வித்தாட்களைப் பார்த்து அறிந்துகொண்டானா என்று கேட்டால் அதுவுமில்லை. இந்தத் தேர்வில் 162 மதிப் பெண்கள் பெற்றதன்மூலம் இங்கி லாந்தில் அதிக ஐக்யூ பெற்றுள்ள முதல் ஒரு விழுக்காட்டினரில் அர்னவும் இடம்பெற்றுவிட்டான் என்று ‘தி இண்டிபெண்டென்ட்’ செய்தி குறிப்பிட்டுள்ளது. “பெரும்பாலானோர் தேர்ச்சி பெற முடியாத அளவுக்கு மிகக் கடினமானது மென்சா தேர்வு. ஆதலால் நானும் தேர்ச்சி பெறு வேன் என்று நினைக்கவில்லை,” என்று அர்னவ் கூறினான்.

தேர்வை எண்ணி தான் பதற வில்லை என்ற அர்னவ், தேர்வு முடிவைப் பற்றிக் கூறியதும் தன் குடும்பத்தினர் ஆச்சரியமடைந் தனர் என்றும் சொன்னான். அர்னவ் தேர்வெழுதிய இரண் டரை மணி நேரமும் முடிவு எப்படி வருமோ என்று தான் கையைப் பிசைந்தபடி இருந்ததாகச் சொன் னார் அவன் தாயார் மீஷா. தன் மகன் இரண்டரை வயதை எட்டியபோது அவனது கணிதப் புலமையைக் கண்டு கொண்டதாகவும் அவர் குறிப்பிட் டார். 1946ஆம் ஆண்டு தொடங்கப் பட்ட மென்சாதான் உலகின் மிகப் பெரிய, பழமையான ஐக்யூ தேர்வாக நம்பப்படுகிறது.