பயிற்றுவிப்பாளரைத் தேர்ந்தெடுப்பதில் இழுபறி

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்றுவிப்பாளரைத் தேர்ந்தெடுப் பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. இந்திய அணியின் ‘ஆல்ரவுண் டராக’வும் அணித் தலைவராகவும் முத்திரை பதித்தவரான ரவி சாஸ்திரியைத் தேர்வுக் குழு தேர்ந்தெடுத்துள்ளதாக நேற்று மாலை சில இணையப்பக்கங்களில் தகவல் வெளியானது. ரவி சாஸ்திரி 2019ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி வரை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பு வகிப்பார் என்று அந்த இணையப் பக்கங்கள் தெரிவித்திருந்தன. இதையடுத்து, இந்திய கிரிக் கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இந்திய அணியின் பயிற்றுவிப்பாளர் யார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என்று நேற்றிரவு தெரிவித்தது.

அண்மையில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வி அடைந்தது. அதனைத் தொடர்ந்து, இந்திய அணியின் பயிற்றுவிப்பாள ராக இருந்த அனில் கும்ப்ளே பதவி விலகினார். இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லியுடன் கருத்து மோதல்கள் ஏற்பட்ட காரணத்தால் கும்ப்ளே பதவி விலகியதாக தெரிய வந்தது. இதையடுத்து, இந்திய அணிக்கான புதிய பயிற்றுவிப்பாளரைத் தேடும் படலம் தொடங்கியது. பயிற்றுவிப்பாளர் பதவிக்காக இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் வீரேந்திர சேவாக், வெஸ்ட் இண்டீஸின் ஃபில் சிம்மண்ஸ், இலங்கை அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் டாம் மூடி, ஆப்கானிஸ்தான் அணியின் தற்போதைய பயிற்றுவிப்பாளர் ரிச்சர்ட் பைபஸ் ஆகியோருடன் ரவி சாஸ்திரியும் விண்ணப்பம் செய்திருந்தனர். 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை இந்திய கிரிக்கெட் அணியின் இயக்குநராக இருந்த ரவி சாஸ்திரி பயிற்றுவிப்பாளராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று பரவலாகப் பேசப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்றுவிப்பாளராக ரவி சாஸ்திரி நியமனம் செய்யப்பட்டார் என்று வெளியான செய்தியை மறுத்த பிசிசிஐ. படம்: ஏஎஃப்பி கோப்புப்படம்