விமான நிலைய விரிவாக்கம்: அமைச்சர் விளக்கம்

சென்னை: சென்னை, கோவை, திருச்சி, மதுரை விமான நிலையங்கள் விரைவில் விரிவாக்கம் செய்யப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய அவர், விரிவாக்கப் பணிக்கு நிலம் கையகப்படுத்த வேண்டி உள்ளது என்றும் தற்போது நிலத்தின் மதிப்பு உயர்ந் துள்ளதால் அந்நடவடிக்கை யில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்றும் கூறினார். “சிறிய விமான நிலையங்கள் அமைக்க, ஏழு நகரங்களைப் பரிந்துரை செய்தோம். அவற்றுள் ஓசூர், நெய்வேலி, சேலம் ஆகிய இடங்களுக்கு முதற்கட்டமாக மத்திய சிவில் விமான போக்கு வரத்து துறை ஒப்புதல் அளித்துள்ளது. மீதி இடங்களும் பரிசீலனையில் உள்ளன,” என்றார் அமைச்சர் விஜயபாஸ்கர்.

நில உடைமையாளர்களிடம் தீர்வாணைய விசாரணை முடிந்ததும், நில மதிப்புத் தொகை வழங்கப்படும் என்று குறிப்பிட்ட அவர், அதன் பிறகு கையகப்படுத்தப்பட்ட நிலங்கள், இந்திய விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்கப்படும் என்றார். விவாதத்தின் போது பேசிய சட்டப்பேரவை காங்கி ரஸ் தலைவர் ராமசாமி, செட்டிநாடு பகுதியில் ஏற்கெனவே சிறிய விமான ஓடுதளம் உள்ளதால் அங்கும் விமான நிலையம் அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.