பரபரப்பாக வலம்வருகிறார் வரலட்சுமி

அண்மைக் காலமாக புதுப் படங்களில் நடிப்பது, சமூகநலன் சார்ந்த விவகாரங்கள் தொடர்பில் அதிரடியான கருத்துக்களைத் தெரிவிப்பது, பெண்களுக்காக உருவாக்கி யுள்ள புதிய அமைப்பில் கவனம் செலுத்துவது என எந்நேரமும் பரபரப்பாக வலம்வருகிறார் வரலட்சுமி. இந்நிலையில் ‘காதல் மன்னன்’ என்ற படத்தில் விமலுக்கு ஜோடியாக நடித்து வருகிறாராம். இது தவிர, அர்ஜுன் நடிக்கும் ‘நிபுணன்’, மாதவன், விஜய் சேதுபதி இணைந்துள்ள ‘விக்ரம் வேதா’, ‘எச்ச ரிக்கை’, ‘சத்யா’ உள்ளிட்ட படங்களிலும் வரலட்சுமியை முக்கிய கதாபாத்திரங்களில் பார்க்க முடியும்.

“மலையாளத்தில் இரண்டு படங்களில் நடிக்கிறேன். அவை போக தமிழில் மேலும் மூன்று புதுப் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளேன். ‘சண்டக்கோழி’ 2ஆம் பாகத்தில் நடிக்குமாறு கேட்டிருக்கிறார்கள். கதை பிடித்திருப்பதால் ஒப்புக் கொண்டேன். “நடிக்க வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் சம்பளம் குறித்து பெரிதாக அலட்டிக்கொள்ள நான் விரும்பவில்லை. ஒரு படத்தின் கதையை வைத்துதான் அதில் நடிப்பதைத் தீர்மானிக்கிறேன்,” என்கிறார் வரலட்சுமி.

 

‘தாரை தப்பட்டை’யில் சற்றே உடல் பெருத்து இருந்தவர், இப்போது எடை குறைந்து மெலிந்து காணப்படுகிறார். கரகாட்டம் ஆடும் கலைஞராக நடித்ததால் உடல் எடையை முன்பு அதிகரித்திருந்தாராம். இப்போது நடிக்கும் படங்களுக்கு அத் தகைய உடல் வாகு தேவையில்லை என்ப தால் மெலிந்துவிட்டதாகச் சொல்கிறார். நடிப்பு என்று வந்தபிறகு, குறிப்பிட்ட கதாபாத்திரங்களில்தான் நடிக்க முடியும், சில வேடங்களில் நடிக்க முடியாது என்றெல்லாம் கூறக் கூடாது என்பதே தனது கொள்கை என்கிறார் வரலட்சுமி.