புதிய ரயில் தடத்தை நஜிப் தொடங்கி வைத்தார்

கோலாலம்பூர்: மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் நேற்று எம்ஆர்டி புதிய ரயில் சேவையை தொடங்கி வைத்தார். சுங்கை புலோ-காஜாங் ரயில் தடத்தை தொடங்கி வைத்துப் பேசிய திரு நஜிப், மக்களுக்கு இன்னும் அதிகமான போக்குவரத்து வசதிகள் செய்துகொடுக்கப் படும் என்று உறுதி அளித்தார். சுங்கை புலோ-செர்டாங் புத்ராஜெயா எம்ஆர்டி தடம், ஈஸ்ட் கோஸ்ட் ரயில்வே, கோலாலம்பூர் - சிங்கப்பூர் விரைவு ரயில் சேவை உள்ளிட்ட பல திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளன என்றும் பிரதமர் கூறினார். புதிதாக திறக்கப் பட்டுள்ள சுங்கை புலோ-காஜாங் தடத்தில் 19 ரயில் நிலையங்கள் உள்ளன என்றும் அவற்றுள் 7 சுரங்கப் பாதை நிலையங்கள் என்றும் அவர் சொன்னார். இத்தடம் வழியாக வரும் ரயிலில் சுமார் 1,200 பேர் வரை பயணம் செய்யலாம். ஒரு நாளைக்கு 400,000 பேர் இத்தட ரயில் சேவையை பயன்படுத்து வார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது. உச்சகட்ட நேரத்தில் பயணிகள் 3.5 நிமிடங்கள் மட்டுமே காத்திருக்க வேண்டும்.

சுங்கை புலோ-காஜாங் ரயில் தடத்தை தொடங்கி வைத்த மலேசியப் பிரதமர் நஜிப், புதிய ரயிலில் பயணம் செய்யவிருக்கிறார். படம்: ஏஎஃப்பி