தேசிய சாதனையை முறியடித்த நீச்சல் வீரர்

சிங்கப்பூர் நீச்சல் வீரரான 20 வயது குவா ஸெங் வென் 200 மீட்டர் மல்லாந்து நீச்சலில் புதிய தேசிய சாதனையைப் படைத்து இருக்கிறார். ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட் டில் நடந்துவரும் உலக வெற்றி யாளர் போட்டிகளில் 200 மீட்டர் தூரத்தை இவர் 1 நிமிடம் 59.49 வினாடிகளில் கடந்து, 24வது இடத்தைப் பிடித்தார். முதல் 16 பேர் மட்டுமே அரையிறுதிக்குத் தகுதி பெறுவர் என்பதால் அவ்வாய்ப்பு குவாவின் கையைவிட்டு நழுவியது. இருப்பினும், அவர் எடுத்துக் கொண்ட நேரம் புதிய சிங்கப்பூர் சாதனையாக அமைந்தது. மல்லாந்து நீச்சலில் 200 மீ. தூரத்தை 2 நிமிடம் 00.45 வினாடி களில் அவர் கடந்திருந்ததே முந்தைய தேசிய சாதனை.

முன்னதாக, உலக வெற்றியாளர் போட்டிகளில் 100 மீ. மல்லாந்து நீச்சல், 200 மீ. வண்ணத்துப்பூச்சி பாணி நீச்சல் ஆகிய இரு பிரிவுகளிலும் இவர் பங்கேற்று இருந்தார். அவ்விரு போட்டிகளி லும் அவரால் அரையிறுதிச் சுற்றை எட்ட முடியாமல் போனது. “200 மீ. வண்ணத்துப்பூச்சி பாணி நீச்சலுக்குப் பிறகு இன்னும் சற்று வேகமாக நீந்தவேண்டும் என்று நினைத்தேன். இன்றைய போட்டியில் நான் எடுத்துக் கொண்ட நேரமும் அதன்மூலம் புதிய தேசிய சாதனையைப் படைத் ததும் எனக்கு மகிழ்ச்சி அளிக் கிறது,” என்றார் குவா. அடுத்ததாக இன்று 100 மீ. வண்ணத்துப்பூச்சி பாணி நீச்சல் போட்டியில் இவர் பங்கேற்கிறார். இந்தப் பிரிவில் ஒலிம்பிக் வெற்றி யாளரான சிங்கப்பூரின் ஸ்கூலிங் இப்போது உலக வெற்றியாளர் பட்டத்தையும் தனதாக்கும் முயற் சியில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக வெற்றியாளர் போட்டிகளில் இதுவரை மூன்று பிரிவுகளில் கிட்டிய ஏமாற்றங்களுக்கு மருந்தாக இன்று 100 மீ. வண்ணத்துப்பூச்சி பாணி நீச்சலில் சாதிக்கும் முனைப்புடன் களமிறங்க இருக்கிறார் 20 வயதான குவா ஸெங் வென். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்