சென்னையில் தீபாவளி வரை தண்ணீர் பஞ்சம்

தமிழகத்தில் கடந்த 130 ஆண்டு களில் இல்லாத வகையில் நிலவும் வறட்சி காரணமாக ஏற்பட்டுள்ள தண்ணீர்ப் பற்றாக்குறைப் பிரச்சினை அக்டோபர் மாதம் தீபாவளித் திரு நாள் வரை தொடரலாம் என்று பொதுப்பணித் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். கர்நாடகா, கேரளா, ஆந்திரா ஆகிய அண்டை மாநிலங்கள் நீர் திறந்துவிடாததும் அல்லது குறைந்த அளவு நீரை மட்டுமே திறந்துவிட்டு இருப்பதும் அதிகாரிகளைக் கவலை யில் ஆழ்த்தியுள்ளது. “தென்மேற்குப் பருவமழை எதிர் பார்த்ததைவிட மிகக் குறைவாகவே பெய்துள்ளது. இதனால் தங்களது நீர்த்தேக்கங்களை நிரப்புவதிலேயே அண்டை மாநிலங்கள் குறியாக உள்ளன. ஆகையால், வழக்கம்போல தமிழகமும் புதுச்சேரியும் இவ்வாண் டும் போதிய நீரின்றி பாதிக்கப்பட்டு இருக்கிறன்றன,” என்று அதிகாரிகள் கூறினர்.

கோவை, சேலம், திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள நீர்த்தேக்கங் களுக்கு நீர்வரத்து தொடர்வதால் மேற்கு, தென்தமிழகப் பகுதிகளில் குடிநீருக்குப் பஞ்சம் ஏற்படாது என்பது ஆறுதலான செய்தி. இந்நிலையில், பல மாதங்களுக்குப் பிறகு கடந்த புதன்கிழமையில் இருந்து வினாடிக்கு 5,000 கன அடிக்கும் சற்று அதிகமாக ஒகனேக் கலுக்கு நீர் வந்துகொண்டிருப்பதால் மேட்டூர் அணையின் கொள்ளளவு 7 டிஎம்சியாக (பில்லியன் கன அடி) உயர்ந்து இருக்கிறது. அணைக்கு நீர்வரத்து இரட்டிப்பா கும் பட்சத்தில் அடுத்த மாதத் தொடக்கத்தில் அணையிலிருந்து விவசாயத்திற்கும் வீராணம் ஏரிக்கும் நீர் திறந்துவிடப்படும் என்று அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். இப்போது ஒருங்கிணைந்த குடி நீர்த் திட்டங்களுக்காக அவ்வணை யிலிருந்து வினாடிக்கு 500 கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது. இந்தக் காலகட்டத்தில் தமிழகத் திலுள்ள அனைத்து அணைகளின் ஒட்டுமொத்த நீர் இருப்பு 30 முதல் 40 விழுக்காடாக இருப்பது வழக்கம். ஆனால் இப்போதைக்கு 15 முதல் 20% நீரே கையிருப்பாக உள்ளது. இதற்கிடையே, வரும் நாட்களில் வடதமிழகத்தில் மழை பெய்யாது போனால் இன்னும் இரண்டு மாதங் களுக்குச் சென்னையில் தண்ணீர்ப் பற்றாக்குறை நீடிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.