சுடச் சுடச் செய்திகள்

பாக். பிரதமர் பதவி விலகல்

ஊழல் வழக்கில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் (படம்) குற்றவாளி என்பதை உறுதி செய்த அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அவரைத் தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டது. இதை அடுத்து, பிரதமர் பதவியில் இருந்து நவாஸ் ஷெரிஃப் விலகினார். உலகின் பல முக்கிய தலைவர்கள் ஊழல் மூலம் சேர்த்த பணத்தைப் பாதுகாக்க மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் முதலீடு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பியது. ‘பனாமாகேட்’ என அழைக்கப்படும் இந்த ஊழல் விவகாரத்தில் ஷெரிஃப் மற்றும் அவரது மகன்களின் பெயர்களும் இடம்பெற்றிருந்தன. இது தொடர்பாக விசாரணை நடத்தும்படி பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, பாக். மத்திய புலனாய்வுப் பிரிவின் இயக்குநர் வஜித் ஜியா தலைமையில் ஆறு பேர் கொண்ட கூட்டு விசாரணைக் குழு, அந்த ஊழல் விவகாரம் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்தது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கில் நேற்றுத் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், ஷெரிஃப் அரசாங்கப் பொறுப்பை வகிக்கத் தகுதியிழப்பதாகக் கூறியதோடு அவர் மீது வழக்குப்பதிவு செய்யவும் உத்தரவிட்டது. பாகிஸ்தான் நிதியமைச்சர் இஷாக் தர்ரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். தமது பதவிக்காலத்தை முடிக்காமல் போனது ஷெரிஃபுக்கு இது மூன்றாவது முறை. அடுத்த பொதுத் தேர்தல் 2018ல் நடக்கவிருக்கும் நிலையில் பாக்.கின் அடுத்த பிரதமராக யார் பொறுப்பேற்பார் என்பது இன்னும் முடிவாகவில்லை. ஷெரிஃபின் சகோதரர் ஷாபாஸ், தற்காப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் உள்ளிட்ட சிலரது பெயர்கள் அடிபடுகின்றன.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon