சர்ச்சையில் சிக்கிய இனியா

தான் நடித்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு வராததால் சர்ச்சையில் சிக்கியுள்ளார் இனியா. அவர் செய்தது சரியல்ல என்று ஒரு தரப்பு குற்றம்சாட்டுகிறது. மற்றொரு தரப்பில் ‘பாவம் அவருக்கு என்ன பிரச்சினையோ?’ என்று ஆதரவும் கிளம்பியுள்ளது. ‘சதுர அடி 3500’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் இனியா. இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு நிச்சயம் வருவதாக தயாரிப்பாளரிடம் கூறியிருந்தாராம். ஆனால் கடைசி வரை நிகழ்ச்சியில் தலைகாட்டவே இல்லை. இப்படத்தில் பங்குபெறாத திரையுலகப் புள்ளிகள் பலரும் இந்நிகழ்ச்சிக்கு வந்த நிலையில், இனியா மட்டும் ஏன் வரவில்லை? எனக் கேள்வி எழுப்பினார் படத்தின் நாயகன் நிகில்மோகன். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இளம் நாயகன் அபி சரவணன், இனியாவுக்கு ஆதரவாகப் பேசியுள்ளார்.

“நான் நடித்த ‘பட்டதாரி’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில்தான் நடைபெற்றது. ஆனால் எனக்கு அழைப்பு இல்லை. கடைசி நேரத்திலாவது என்னை அழைப்பார்கள் என எதிர்பார்த்து நிகழ்ச்சி நடந்த அரங்கின் வெளியே காத்துக் கிடந்தேன். “அது போன்று இந்தப் படத்தில் நடித்துள்ள இனியாவுக்கும் படக் குழுவுக்கும் இடையே என்ன பிரச்சினையோ? அது தெரியாமல், அவரைக் கண்டிப்பது சரியல்ல,” என்கிறார் அபி சரவணன். இந்த விவகாரம் குறித்து இனியா தரப்பில் இது வரை எந்தவித விளக்கமும் வரவில்லை. ஏனோ, வாய் திறக்காமல் மௌனம் காத்து வருகிறார் இனியா. விரைவில் விளக்கம் வரும் என எதிர்பார்க்கலாம்.